இந்த உலகம் மிகவும் கொடூரமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ஆனால் தற்போது, சீனாவில் புதிய வகை வைரஸ் நோய் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
இந்த புதிய வகை வைரஸ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.
ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் இதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகி வருகின்றன.
“இந்த வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு சளி மற்றும் கோவிட்-19 போன்ற அதே அறிகுறிகள் தென்படும். இந்த நோய் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது” என்று ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி பிபிசி மானிட்டரிங் பிரிவு தெரிவித்துள்ளது.
சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவது போன்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இந்த நோயாளிகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தன.
சீனாவில் பரவி வரும் இந்த புதிய வைரஸ் மக்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதாக கவலைகள் எழுந்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொரொனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாக நம்பப்படுகிறது.
சீனாவின் அரசுசார் செய்தித் தளமான குளோபல் டைம்ஸ் கூற்றுப்படி, வட சீனா, பெய்ஜிங், தென்மேற்கு நகரமான சோங்கிங் மற்றும் தென் சீனாவிலுள்ள குவாங்டாங் மாகாணம் போன்ற பகுதிகளில் இந்த HMPV வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசெம்பர் 27ஆம் தேதி ராய்ட்டர்ஸ் வெளியிட்ட ஒரு செய்தியில், குளிர்காலத்தில் சுவாசப் பிரச்னைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சீனாவின் சுகாதார நிறுவனங்கள் புதிதாக ஒரு நோய் கண்காணிப்பு அமைப்பைத் தொடங்குவதாகக் குறிப்பிட்டன.
இந்த கண்காணிப்பு முறை குறித்துப் பேசிய சீனாவின் தேசிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் தலைவர் லி ஜென்லாங், இதன் மூலம் அறியப்படாத காரணங்களால் ஏற்படும் நிமோனியா பாதிப்புகள் கண்காணிக்கப்படும் என்று கூறினார்.
சீனாவில் சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை டிசம்பர் மூன்றாவது வாரத்தில் மிகவும் அதிகரித்து இருப்பதாக சீன அரசு அறிக்கையைச் சுட்டிக்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கைப்படி, ரைனோவைரஸ் மற்றும் இந்த HMPV வைரஸ் நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சீனாவின் வடக்குப் பகுதியில்தான் பெரும்பாலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் எங்கிருந்து உருவாகிறது என்பது பற்றி எந்தத் தகவலும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இதற்கு முன்பு, சீனாவில் பரவி வந்த இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பிற சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் குறித்து இந்தோனீசியாவின் சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
“மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும், முகக்கவசம் அணிவது, சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி கைகளைக் கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று இந்தோனீசியாவின் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் வித்யாவதி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் என்று இந்தோனீசியாவின் செய்தி நிறுவனமான அந்தாரா தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் 200 முதல் 400 ஆண்டுகளுக்கு முன்பு பறவைகளில் தோன்றியது என்றும், அதன் பிறகு இந்த வைரஸ் சூழலுக்கேற்ப மீண்டும் மீண்டும் தன்னைத் தகவமைத்துக் கொண்டதாகவும் இப்போது இந்த வைரஸ் பறவைகளைப் பாதிக்காது என்றும் சயின்ஸ் டைரக்ட் என்ற ஆய்வுக்கட்டுரைகளுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“கடந்த 2001ஆம் ஆண்டு மனிதர்கள் மத்தியில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அப்போதுதான் இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கும் என்று கண்டறியப்பட்டது” என்று அமெரிக்க அரசின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) குறிப்பிட்டுள்ளது.
இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்கலாம். இதன் காரணமாக, நோயாளிக்கு காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
நோய் பாதிப்பு அதிகரித்தால், இந்த வைரஸால் மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
இந்த வைரஸ் பொதுவாக மூன்று முதல் ஆறு நாட்கள் உயிருடன் இருக்கும். தொற்று எவ்வளவு கடுமையானது என்பதைப் பொறுத்து குறைந்த அல்லது அதிக நாட்களுக்கு நோய் பாதிப்பு இருக்கலாம்.