இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள BYD மின்சார கார்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மேலதிக சமர்ப்பணங்களை உறுதி செய்வதற்காக இந்த மாதம் 7 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன் அழைக்கப்பட்டிருந்தது.
இதன்போது மனுதாரர் சார்பில் ஆஜராகி சமர்ப்பணங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி பர்சானா ஜமீல், இறக்குமதி செய்யப்பட்ட குறித்த வாகனங்களை தடுத்து வைக்க சுங்கம் எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த வாகனங்களை வங்கி பிணைப்பத்திரங்களுக்கு அமைய சுங்கத்திற்கு விடுவிக்க முடியும் என அவர் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினார்.
இதன்போது இலங்கை சுங்கம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன சமர்ப்பணங்களை முன்வைத்து, இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட 997 வாகனங்கள் சுங்கத்தின் பொறுப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த வாகனங்களின் மோட்டார் திறன் 100 கிலோவாட்டா? அல்லது 150 கிலோவாட்டா? என்பதை முடிவு செய்ய மொரட்டுவை மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரண்டு நிபுணத்துவமிக்க பேராசிரியர்கள் மற்றும் BYD-யின் இரண்டு பொறியாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்த அறிக்கை கிடைக்கும் வரை குறித்த வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய வரிகளுக்கு இடையிலான வேறுபாட்டைக் கணக்கிட்டு, அந்தத் தொகையை சுங்க பணிப்பாளர் கணக்கில் வைப்புத்தொகையாக வைப்பு செய்தால், அந்த வாகனங்களில் 06 வாகனங்களை விசாரணைக்காகத் தக்கவைத்துக் கொண்டு, மீதமுள்ள வாகனங்களை விடுவிக்கலாம் என்றும் பிரதிவாதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
இந்த சமர்ப்பணங்களின் பின்னர் குறித்த மனுவை இந்த மாதம் 7 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்ட நீதியரசர்கள் அமர்வு, இந்த முன்மொழிவு குறித்து மனுதார் தரப்பின் நிலைப்பாட்டை அன்றைய தினம் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டனர்.
இந்த மனு, ஜோன் கீல்ஸ் சிடி ஒட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.