சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது.
இதனால் எமது நாட்டில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயினர்.
மேலும் பெருமளவிலான சொத்துக்களும் அழிவடைந்தன.
அதற்கமைய, சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், 2005 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி ‘தேசிய பாதுகாப்பு தினமாக’ பெயரிடப்பட்டுள்ளது.
சுனாமி பேரழிவு மற்றும் இதுவரை நாட்டில் இடம்பெற்ற பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், இம்முறையும் “தேசிய பாதுகாப்பு தின” நினைவுகூரல் நிகழ்வு இன்று (26) காலை 8.30 மணி முதல் காலை 11.00 மணி வரை காலி, பெராலிய சுனாமி நினைவுத் தூபிக்கு அருகில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மாவட்ட ரீதியாகப் பல்வேறு சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, பெராலிய பகுதியில் சுனாமி அலைகளுக்குச் சிக்கி விபத்துக்குள்ளான ரயில் துயரச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில், மருதானை ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6.30 மணிக்கு மாத்தறை நோக்கிய ரயில் ஒன்றை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


