விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வருவது தொடர்பாக முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், அரசியல் காரணங்களுக்காக அது நிராகரிக்கப்பட்டது,” என ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ., எலான் மஸ்க் கூறியுள்ளார்.
கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ‘ ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினர்.
இது தொடர்பாக ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விண்வெளி வீரர்களை பூமிக்கு பத்திரமாக அழைத்து வந்த ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா குழுவினருக்கு பாராட்டுகள். இந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளித்த அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
முன்னதாக டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் எலான் மஸ்க் கூறியதாவது: விண்வெளி வீரர்களை பத்திரமாக அழைத்து வர தயார் என முன்னரே கூறினோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. 8 நாட்கள் மட்டுமே அவர்கள் விண்வெளியில் இருந்து இருக்கவேண்டும். ஆனால், 10 மாதங்கள் இருந்தனர். இதற்கு எந்த காரணமும் இருக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்னரே ஸ்பேஸ் எக்ஸ் மூலம் அவர்களை அழைத்து வந்திரப்போம். இதற்கான கோரிக்கையை ஜோ பைடன் நிர்வாகத்திடம் வைத்தோம். ஆனால், அரசியல் காரணங்களுக்காக அது நிராகரிக்கப்பட்டது. இது தான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதமும், எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், ‘ ஜூன் 2024 முதல் விண்வெளியில் சிக்கி உள்ள வீரர்களை மீட்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார். இத்தனை நாட்கள் அவர்களை விண்வெளியில் வைத்திருந்தது மோசமானது எனக்கூறியிருந்தார். இதனை டிரம்ப்பும் உறுதி செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.