ஜூட் சமந்த
சிலாபத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்து இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாகக் கருதப்படும் 152 வெளிநாட்டவர்களை ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி எஸ்.டி. அபேரத்ன கடந்த 3 ஆம் திகதி உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் 137 பேர் சீன நாட்டவர்கள் ஆவர். ஏனையவர்கள் வியட்நாம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 177 கணினிகள், 577 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல்வேறு மின்னணு உபகரணங்களை சோதனையிட்ட அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சிலாபம் – இரணவில பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் கடந்த மூன்று மாதங்களாக தங்கியிருந்த இந்த வெளிநாட்டவர்கள், இணையதள குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் பிரிவினர் கடந்த 2 ஆம் திகதி மாலை இந்தச் சோதனையை நடத்தினர்.
காவல்துறையினர் சுற்றிவளைத்த போது, விடுதியில் இருந்த சில சந்தேகநபர்கள் தப்பியோட முயற்சித்தனர். இதன்போது காயமடைந்த இரண்டு சீன நாட்டவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா மற்றும் வணிக விசாக்களில் இலங்கைக்கு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களில் சிலரிடம் இலங்கையில் தங்கியிருப்பதற்கான முறையான விசா அனுமதி இருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் அந்த விடுதிக்கு நேரில் சென்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




