நவீன தொழில்நுட்பத்தை இணைத்து சுவசேரிய ஆம்புலன்ஸ் அணியை 500 ஆக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சுவசேரிய இலவச அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் திறன்களை வளர்ப்பதற்காக செயல்படுத்தப்பட்ட விசேட பயிற்சி திட்டத்தை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று மதியம் பார்வையிட்டார்.
இங்கிலாந்தின் நியூ பக்கிங்ஹாம்ஷையர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வில் பிராட்டனின் தலைமையில், நிபுணர்கள் குழுவின் மேற்பார்வையின் கீழ் 05 நாட்கள் நடத்தப்படும் இந்த விசேட பயிற்சி திட்டம், இலங்கை மன்றத்தில் (Srilanka foundation) நிறுவனத்தில் நடைபெறுகிறது.
இந்த பயிற்சித் தொடர் நடத்தப்படுவது இது நான்காவது முறையாகும்.
பேராசிரியர் வில் பிராட்டன் மற்றும் நிபுணர்கள் குழு இதற்காக எந்த கட்டணத்தையும் பெறாமலும், விமான போக்குவரத்து செலவு உட்பட அனைத்து செலவுகளையும் இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் நிபுணர்கள் குழு ஏற்றுள்ளது.
இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட உள்ளமை விஷேட அம்சமாகும்.
சுவசேரியா ஆம்புலன்ஸ் அணியை 500 ஆக உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும், சமீபத்திய தொழில்நுட்பத்தைச் சேர்ப்பதன் மூலம் இந்த ஆம்புலன்ஸ் சேவையை புதுமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதன்போது தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்துடனான கலந்துரையாடல்கள் மூலம் மேலும் 100 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும் என்றும், கூடுதலாக, ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து கடன் உதவியின் கீழ் 20 ஆம்புலன்ஸ்கள் பெறப்படும் என்றும், மேலும் 25 ஆம்புலன்ஸ்கள் மானியமாகப் பெறப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சுவசேரிய இலவச அவசர மருத்துவ சேவைக்கான பத்து ஆண்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது, மேலும் விபத்து அல்லது திடீர் நோய்வாய்ப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வரும் ஆம்புலன்ஸ் பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஏற்படுவதினால், தொலைபேசி அழைப்பு வந்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மோட்டார் சைக்கிள்களில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பும் சிறப்பு முறையை செயல்படுத்துவது பத்து ஆண்டு திட்டத்தின் பிரதான நோக்கம் என சுவசேரிய தலைவர் மேஜர் (ஓய்வு) நிரோஷன் ரத்நாயக்க அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
சுவசேரிய 1990 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் “ஒரு உயிரைக் காப்பாற்றுதல்” என்ற முதன்மை நோக்கத்துடன் நிறுவப்பட்டது.
ஆரம்பத்தில், இந்திய அரசின் அனுசரனையுடன் செயல்படுத்தப்பட்ட “சுவசேரிய” தேசிய அவசர ஆம்புலன்ஸ் சேவை தற்போது இலங்கை அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகிறது.
சுவசேரிய அவசர ஆம்புலன்ஸ் சேவையின் தலைமை மருத்துவ அதிகாரி திரு. ஸ்ரீலால் டி சில்வா, பயிற்சித் திட்டத் தலைவர் திரு. ஸ்டானோஷன் மற்றும் பலர் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.



