Thursday, August 7, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசெம்மணி புதைகுழியிலிருந்து 54 சான்றுப் பொருட்கள்!

செம்மணி புதைகுழியிலிருந்து 54 சான்றுப் பொருட்கள்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு நீதிமன்றினால் வைக்கப்படவுள்ளன.

இதன்போது பொதுமக்கள் குறித்த சான்றுப் பொருட்களைப் பார்வையிட்டு அது பற்றிய தகவல்கள் தெரிந்திருப்பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கோ, நீதிமன்றுக்கோ குறிப்பிட முடியும்.

இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி சான்றுப்பொருள்களைப் பார்வையிடுவது தொடர்பான ஒழுங்கு விதிகள் பற்றி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கடந்த 2ஆம் திகதி கட்டளை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1.இது ஒரு நீதிமன்றச் செயல்முறை என்பதனால், அந்நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் நீதிமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் கண்ணியத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.

2. காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

3. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம்). முகவரி என்பன நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும்.

4. இருபத்தொரு (21) வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மாத்திரம், மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

5. பங்குபற்றும் நபர்கள், மேற்படி நீதிமன்ற நடவடிக்கையையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ, ஒலி, ஒளிப்பதிவு செய்யவும், எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகின்றது.

6. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.

7. பங்குபற்றும் நபர்கள், காண்பிக்கப்படும் சான்று பொருட்களை கையாளுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது.

8. மேற்படி நடவடிக்கை ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதனால், நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்படுகின்றது. ஆகவே, இந்நடவடிக்கை நடைபெறும் வேளையில், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேற்படி ஒழுங்குவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்றினால் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular