புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.