பாரபட்சமின்றி நாட்டை புதிய கோணத்தில் முன்னோக்கி கொண்டுச் செல்லவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத்திய அரசாங்கம், 09 மாகாண அரசாங்கங்கள் உள்ளடங்களாக 10 அரசாங்கங்களின் கீழ் உள்ள அனைவருக்கும் பொறுப்புகளை வழங்கி நாட்டை முன்னேற்றுவதாக உறுதியளித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபைகளின் முன்னாள் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று (31) இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு அர்ப்பணிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 116 மாகாண சபைகளின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
“நாட்டில் வளர்ச்சி கண்டுவரும் பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீற முடியாது. தேர்தல் நடத்தப்பட்டாலும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
2022 இல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் பெரும்பான்மையானவர்கள் என்னை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். அந்த ஆதரவு இல்லாவிட்டால் இன்று நாடு இந்த நிலையை அடைந்திருக்காது. எனவே அந்த தீர்மானத்தை எடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூறுவதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.
பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் இந்த இடத்தில் உள்ளனர். ஆனால் மக்களுக்காக இணைந்து பயணிக்க வேண்டும். சம்பிரதாய அரசியல் இனி செல்லுபடியாகாது. ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு வழியில்லை” என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, அனுர பியதர்ஷன யாப்பா, இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத், பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆஷு மாரசிங்க, முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் மாகாண அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.