ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வடமேல் மாகாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கௌரவிப்பு!
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் 2023/2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிக்கும் வடமேல் மாகாண நிகழ்ச்சித் திட்டம் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன ஆகியோரின் தலைமையில் அண்மையில் (26) வடமேல் மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில், 6 பாடத் துறைகளின் கீழ் 1 முதல் 10 வரையான இடங்களைப் பெற்ற 240 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா ஊக்கத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியம் 24 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே வரவேற்புரையில் நோக்கங்களை தெளிவுபடுத்தினார்.
இங்கு மாணவர்களிடையே உரையாற்றிய பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, நாட்டிற்குத் தேவையான ஆளுமைமிக்க தலைமையை கட்டியெழுப்புவதில் மாணவர்களை கௌரவிப்பது மிகவும் முக்கியமான பணியாகும் என்றும், அதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சித் திட்டத்தை மிகவும் பாராட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக வாழத் தகுந்த நாட்டை உருவாக்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இந்த சவால்களை வெற்றி கொள்வதற்காக நாட்டு மக்களை ஒன்றிணைத்து பாரிய தேசிய செயற்றிட்டமொன்று எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், எந்தவொரு பிள்ளையையும் கைவிடாது ஒவ்வொரு பிள்ளையின் சமூகப் பாதுகாப்புக்காகவும் அரசாங்கம் செயற்படும் என்றும், அதி-பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 17,000 இற்கும் அதிகமான பிள்ளைகள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உட்பட அனைத்து மட்டங்களிலுமுள்ள பிள்ளைகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.
அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் நந்தன அபேரத்னவும் இங்கு மாணவர்களிடையே உரையாற்றினார். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மப்பிரிய திசாநாயக்க, விஜேசிங்ஹ பஸ்நாயக்க, ஜகத் குணவர்தன ஆகியோரும், வடமேல் மாகாண பிரதம செயலாளர், குருநாகல் மாவட்ட செயலாளர், மாகாண கல்விச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




