தமிழ் – முஸ்லிம் அரசியல் இரண்டறக் கலந்திருந்த காலத்தில் இன்றியமையாதவராக இருந்த ஒருவர் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ்
அனுதாபப் பிரேரணையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவிப்பு
தமிழ் மக்களின் அரசியலோடு தமிழ் பேசும் முஸ்லிம்களுடைய அரசியலும் இரண்டறக் கலந்திருந்த காலப் பகுதியில் அதில் ஓர் இன்றியமையாத அங்கமாக இருந்தவர்தான் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ் என பாராளுமன்றத்தில் சென்ற வெள்ளிக்கிழமை அவரது அனுதாப பிரேரணை மீது உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,
மறைந்த ஐதுரூஸ் முஹம்மத் இல்யாஸ் என்ற ஆளுமை இந்த நாட்டின் முஸ்லிம்களுடைய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தடயத்தைப் பதித்துச் சென்ற ஆளுமை என்றால் அது மிகையாகாது.
புத்தள மாவட்டத்திலிருந்து தன்னுடைய அரசியலை ஆரம்பித்தாலும், அவருடைய அரசியல் உண்மையில் 1977 ஆம் ஆண்டு அன்று முஸ்லிம் ஐக்கிய முன்னணி ஊடாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அவருடைய முதலாவது பிரசுரம் எனக்குக் கிடைத்திருக்கிறது.
அதில் அவர் சொல்லியுள்ள விடயம் மிகவும் முக்கியமானது.
“புத்தளத் தொகுதி வாக்காளப் பெருமக்களே, தேர்தல் களம் உங்களை அழைக்கின்றது. நீங்கள் தயார்தானா? சத்தியத்தின் காவலன், இஸ்லாமிய தமிழினத்தின் இளைய தலைவன் டாக்டர் ஐ.எம். இல்யாஸ் தமிழினத்தின் விடுதலைவேண்டி தேர்தல் களத்தில் குதிக்கும் இறுதிப் போர் நடக்கவிருக்கின்றது. அதர்மத்தின், அக்கிரமத்தின் அணிவகுப்புக்கு எதிரே ஆட்சிப் பலமும், ஆயிரம் கோடி பண பலமும் நம் எதிரே நிற்கின்றன. தந்தை செல்வாவின் அகிம்சை கொள்கை என்ற ஆயுதம் மட்டும்தான் நம்மிடமுள்ளது. கையில் காசு இல்லை; நம் நெஞ்சில் மாசும் இல்லை, கனந்து எரியும் கொள்கைக் கனல் உண்டு” என்று இப்படி மிக உற்சாகமான, புரட்சிகரமான வார்த்தைப் பிரயோகங்களோடு, “டாக்டர் ஐ.எம். இல்யாஸ் அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்த உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என்ற ஒரு தேர்தல் பிரசாரத்தோடுதான் அவருடைய அரசியல் ஆரம்பித்திருக்கின்றது.
எனவே, தமிழ் மக்களுடைய அரசியலோடு தமிழ் பேசும் முஸ்லிம்களுடைய அரசியலும் இரண்டறக் கலந்திருந்த 1977 ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தல் காலத்திலிருந்து இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் இன்றியமையாத ஓர் அங்கமாக இருந்தவர்தான் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ்.
அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினராக எங்களோடு இணைந்து கொண்டு அவருடைய பணிகளை ஆரம்பித்து, யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறுப்பினராக முதலில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், புத்தளம் மாவட்டத்தில் இருக்கின்ற இடம்பெயர்ந்து வாழ்கின்ற வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் அனைவராலும் மறக்கமுடியாதவர். அந்த மக்கள் 1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து பலவந்தமாக புலிகளால் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்ட வேளையில், புத்தள மண்ணில் அவர்கள் புகலிடம் தேடி வந்தபோது, அவர்களுக்கு அபயம் அளித்த- முன்னின்று அவர்களுக்காக உதவிக்கரம் நீட்டிய ஒருவர் அவர் என்பதைப் பற்றிய நீண்ட வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.
அதேபோல் அவருடைய உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் ,காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தைப் போன்றது. இவரும் உப்பு பாத யாத்திரை ஒன்றை மேற்கொண்டு குருணாகல் வரை சென்று உப்பளத்து பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கான மிகப் பெரிய போராட்டங்களைச் செய்தவர்.
அதைவிடவும் முக்கியமாக, அவருடைய அரசியலில் அவருடைய புரட்சிகரமான பல பக்கங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் ஒரு முறை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு மதீனா நகர் என்ற பகுதியில் குத்பா பிரசங்கம் நடத்துவதற்கு, அண்மையில் எம்மைவிட்டு பிரிந்த அவருடைய ஆத்ம நண்பர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஹஸரத் குத்பா ஆரம்பிக்கும் போது ஆசாக் கோலாகப் பயன்படுத்துவதற்கு கைப்பிடியொன்றைக் கேட்டபோது,டாக்டர் இல்யாஸ் உடனடியாக அவரிடத்திலிருந்த ஏகே47 துப்பாக்கியைக் கொடுத்து, அந்த துப்பாக்கியை பிடித்துக் கொண்டு குத்பா ஓதிய காரணத்தினால், அடுத்தநாள் பரபரப்பாக பிரபல பத்திரிகைகள் அந்தச் செய்தியை வெளியிட்டபோது அது மிகப் பெரிய வில்லங்கமாக மாறி, பிறகு ரஞ்சன் விஜயரட்ன போன்ற அன்றைய பாதுகாப்பு அமைச்சர்கள் மிகக் கோபமாக எங்களுடைய மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச் எம்.அஷ்ரப்பிடம் டாக்டர் இல்யாஸை கைது செய்யவேண்டும், அப்துல்லா ஹஸரத்தை கைது செய்யவேண்டும் என்றெல்லாம் கூறிய ஒரு காலமும் இருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில்,மறைந்த டாக்டர் இல்யாஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற மேலான சுவனம் கிட்டுவதாக என்றும் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்றார்.