கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற சங்கிலித் தொடர் விபத்தில் லொறி உதவியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரேக் செயலிழந்த லொறி ஒன்று, இரண்டு பேருந்துகளை அடுத்தடுத்து மோதித் தள்ளியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த லொறி, அதிவேகத்தில் சென்று முன்னால் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.ச) சொந்தமான பேருந்தின் பின்பக்கத்தில் பலமாக மோதியது.
அந்த வேகத்தில் இ.போ.ச பேருந்து, தனக்கு முன்னால் சென்ற தனியார் பேருந்துடன் மோதியதுடன், அருகில் இருந்த மதகில் மோதி நின்றது. எனினும், லொறி மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட தனியார் பேருந்து, வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லொறியில் பயணித்த மற்றொரு நபரும், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த சில பயணிகளும் காயமடைந்து கேகாலை மற்றும் மாவனெல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“ஜெட் விமானம் போல மோதியது..” – சாரதியின் வாக்குமூலம்
விபத்துக்குள்ளான பூண்டுலோயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தின் சாரதி இந்த அதிர்ச்சியை விவரிக்கும் போது: “நான் முன்னால் சென்ற பேருந்துக்காக வேகத்தைக் குறைத்தேன். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் ஏதோ ஒன்று ‘ஜெட் விமானம்’ செல்வது போன்ற வேகத்தில் எங்களை மோதித் தள்ளியது. என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது,” எனத் தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்ற போது தனியார் பேருந்தில் சுமார் 55 முதல் 60 பயணிகள் வரை இருந்துள்ளனர். நல்வாய்ப்பாகப் பலருக்குப் பாரிய காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


