இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின், அதற்க எதிராக அனைத்துலக நாடுகளும் செயல்பட வேண்டும். குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து நட்பு நாடுகள் அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அரசாங்கம், இம்முறை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றோ வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றோ நம்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை (07) ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை ஜெனிவா சென்றுள்ளது.
அத்துடன் பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரியக் குழு (Core Group on Sri Lanka) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டம்பர் அமர்வில் ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்கவுள்ளது.
இந்த புதிய தீர்மானம், ஏற்கனவே உள்ள தீர்மானங்களை விட, மென்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கமாக இருக்கும்.
இருப்பினும் ஜெனிவா விடயத்தை மையப்படுத்தி இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
இதன் போது அனைத்து இன மக்கள் வாழும் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றிப்பெற்றுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து சிறுபான்மை இன மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்ட அரசாங்கமாகவே இலங்கையின் தற்போதைய ஆட்சி உள்ளது.

அனைத்து இன மக்களின் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பவற்றை உறுதி செய்வதில் முழுவதுமாக ஈடுப்பாட்டுடன் தீர்மானங்களை எடுத்து வருகின்றோம். இதன் பிரகாரம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பவற்றை இரத்து செய்வதற்கும் தீர்மானம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதேபோன்னு நாட்டில் மக்கள் ஆணையை உறுதி செய்வதற்காக உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தி வருகிறோம். மாகாண சபை தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும். வன்முறைகள் அற்ற தேர்தல்கள் இடம்பெறுவதற்கு தேவையான சட்ட ஒழுங்குகளை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
கடந்த 11 மாதங்களாக எவ்வித பாரதூரமான மனித உரிமைகள் மீறல்களும் நாட்டில் இடம்பெறவில்லை. காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய வற்றின் செயல்பாடுகளை வலுப்படுத்தியுள்ளோம்.
எனவே இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின், அதற்க எதிராக நட்புகள் செயல்பட வேண்டும். குறிப்பாக இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து நட்பு நாடுகள் அறிக்கை வெளியிட வேண்டும்.
எவ்வாறாயினும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றோ வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றோ நம்பவில்லை. அவ்வாறானதொரு சூழல் வந்தால் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என தெரிவித்தார்.