கொழும்பு, மே 18 (டெய்லி மிரர்): தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்குள் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் நிலவி வருவதாக பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில், எதிர்க்கட்சியில் உள்ள திறமையான பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சில சிரேஷ்ட அரசாங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
தற்போது வீழ்ச்சியடைந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், அரசாங்கத்தின் கொள்கை வகுப்பிற்கு ஆதரவளிப்பதற்கும் எதிர்க்கட்சியில் உள்ள தகுதியும் திறமையும் வாய்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் உள்வாங்குவது குறித்து ஜே.வி.பி.யின் சிரேஷ்ட தலைவர்கள் ஆலோசித்துள்ளனர்.
அத்துடன், ஜே.வி.பி.யின் வழக்கமான “ஒற்றைக் கட்சி” (One-party ideology) என்ற சித்தாந்தத்தில் இப்போது மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளில் உள்ள திறமையாளர்களுக்கு அரசாங்கத்தில் இடமளிக்க வேண்டும் என்றும் சிலர் வலுவாக வாதிட்டுள்ளனர்.
எனினும், இந்த யோசனையை ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா முற்றிலும் நிராகரித்துள்ளார். ஜே.வி.பி அதன் ஒற்றைக் கொள்கையிலேயே தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும், இந்த தருணத்தில் யாருக்கும் அழைப்பு விடுக்கக் கூடாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எனினும், டில்வின் சில்வாவின் இந்த கருத்துக்கு கட்சியின் மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டுள்ளனர்.
முற்றிய வாக்குவாதம்: கைகலப்பில் முடிந்ததாக தகவல்
இந்த காரசாரமான விவாதத்தின் போது, விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்தவின் வீடு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி காரணமாக அரசாங்கத்தின் செல்வாக்கு ஓரளவுக்கு சரிந்துள்ளதாக டில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் லால்காந்த, டில்வின் சில்வாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோதல் ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாகவும், அங்கு பிரசன்னமாகியிருந்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு வன்முறையில் ஈடுபடும் அளவிற்கு நிலைமை மோசமடைந்ததாகவும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன?
இந்த ஒட்டுமொத்த சம்பவத்தின் போதும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அங்கேயே இருந்துள்ளார். அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தபோதிலும், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்த பிரேரணையை அவர் நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ இல்லை எனத் தெரிகிறது.
அமைச்சரவை அந்தஸ்து கோரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
இதேவேளை, அரசாங்கத்திற்கு ஏதோ ஒரு வழியில் ஆதரவளிப்பதற்காக எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை சிரேஷ்ட அரசாங்க உறுப்பினர்கள் ஏற்கனவே அணுகியுள்ளனர். எனினும், அவ்வாறு அணுகப்பட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தமக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் (Cabinet portfolios) வேண்டும் என நிபந்தனை விதித்ததால், அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் திறைசேரிப் பணத்தை ஹேக்கர்கள் (Hackers) கொள்ளையடித்ததாகக் கூறப்படும் அண்மைக்கால சர்ச்சை மற்றும் கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டே இந்த முடிவுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதிலும் ஊழலை ஒழிப்பதிலும் ஜனாதிபதி திஸாநாயக்க உறுதியாக உள்ளார் என்றும், பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நிபுணர்களின் ஆலோசனைகளையும் பல்வேறு புதிய திட்டங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு அவரது தலைமைத்துவம் தயாராகவே இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.


