டித்வா சூறாவளியால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் தருணத்தில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துவிட்டு, இப்போது மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கான தீர்மானங்களையும் முன்மொழிந்துள்ளனர் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கு, எண்ணெய் சார்ந்த மின் உற்பத்திக்குப் பதிலாக குறைந்த விலை கொண்ட சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் நிலையங்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களை நோக்கித் திரும்புதல், சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்தியை படிப்படியாக அதிகரிக்கும் முகமாக தமது கொள்கையையும் வடிவமைத்துள்ள தற்போதைய அரசாங்கம், ஆட்சிக்கு வந்த பிற்பாடு, மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து, மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தைக் குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதிகளைக் கைவிட்டு, மக்கள் அபிலாஷைகளை கிடப்பில் போட்டு எடுத்து வரும் நடவடிக்கைகள் தெளிவாகத் தெரிவதனால், விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக அரசாங்கத்திடம் பின்வரும் கேள்விகளை எழுப்புகிறேன்.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 11.57% ஆல் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையால், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUC) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை இலங்கை மின்சார சபையின் இழப்புகளை ஈடுகட்டும் நோக்கிலா?
இவ்வாறு மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்கள், சிறிய தொழில்கள் மற்றும் அரச நிறுவனங்களில் அதிகரித்து வரும் மின்சாரச் செலவுகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளனவா? அவற்றை சபையில் சமர்ப்பிக்க முடியுமா?
மின்சாரக் கட்டணத்தை 1/3 ஆகக் குறைப்பதற்கும், மின்சார கட்டணங்களை அறவிடும் ஒழுங்கை வெளிப்படையான முறைமையொன்றிற்கு கொண்டு வருவதற்கும் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டமைக்கான காரணங்கள் யாது? இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை அரசாங்கம் ஏன் புறக்கணித்து வருகின்றது?
அரசாங்கத்தால் முன்வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய வலுச்சக்தி கொள்கைக்கு பொதுமக்களின் ஆலோசனைகளைக் கோர விடுத்திருக்கும் காலம் நியாயமானது என்று அரசாங்கம் கருதுகிறதா? முழு நாடும் ஒரு பேரழிவை எதிர்கொண்டுள்ள நேரத்தில் இந்தக் காலத்தை நீடிக்க வேண்டுமல்லவா? புதிய கொள்கை தொடர்பில் தொழில்நுட்ப, நிதி மற்றும் பொருளாதார ரீதியிலான பகுப்பாய்வுகள் நடத்தப்பட்டுள்ளனவா? அவற்றைச் சபையில் சமர்ப்பிக்க முடியுமா?
புதிய வலுச்சக்திக் கொள்கையின் கீழ் தற்போதைய குறுக்கு மானியத்தை (Cross-subsidy) நீக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறதா? ஆமெனில், இதனால் ஒவ்வொரு துறைக்கும் ஏற்படும் தாக்கம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? அவற்றைச் சபையில் சமர்ப்பிக்க முடியுமா?
குறுக்கு மானியங்களை நீக்குவதாக இருந்தால், அது குறித்த ஒப்பீட்டு ரீதியிலான அறிக்கையொன்றை இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா?
புதிய வலுச்சக்திக் கொள்கையின் கீழ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான பணம் செலுத்தும் வழிமுறைகளில் பயன்பாட்டு நேரத்தின் அடிப்படையில் (Time of Use) மாற்றத்தைக் கொண்டு வர எதிர்பார்க்கிறீர்களா? ஆமெனில் அது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா? அதனை சபையில் சமர்ப்பிக்க முடியுமா?
இந்தக் கொள்கையின் மூலம் காற்றாலை, சிறிய நீர் மின்சாரம் உற்பத்தி நிலையம் மற்றும் உயிரி மீள்புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கான அறவீட்டு முறையை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? இந்த மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆற்றலை தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதில் ஏதேனும் வெட்டுக்களைச் செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறதா? அது எந்த விதத்தில்? இங்கு சட்டப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா?
மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்போம் என்று கூறிய அரசாங்கம், இன்று எரிபொருள்களின் விலையைக் கூட அதிகரித்துள்ளன. திறைசேரி விதிக்கும் வரிகளை நீக்கி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில் எரிபொருளைப் பெற்றுத் தருவோம் என்று கூறிய அரசாங்கம், இன்று மீண்டும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளன.
கொமிஸ்களை இல்லாதொழிப்போம் என்று பிரஸ்தாபித்தனர். ஆனால் இன்று உலகில் எரிபொருள் விலைகள் குறைந்து கொண்டிருக்கும் வேளையில், நமது நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கைதியாக மாறிவிட்டுள்ளது. டித்வா சூறாவளியால் நாடு பாதிக்கப்பட்டிருக்கும் சமயத்தில், இன்று மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளனர். ஒருபுறம், எரிபொருள் விலையை அதிகரித்துவிட்டு மறுபுறம் தேர்தல் வாக்குறுதிகளைக் கூட இந்த அரசாங்கம் மீறிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.


