வாஷிங்டன்: “இந்தியா – பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்” என வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் 4 நாள்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது.
இந்த போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 30 முறை கூறி உள்ளார். அவரது இந்த பேச்சு இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்திய டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வௌ்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது,
“அதிபர் டிரம்ப் தற்போது தாய்லாந்து – கம்போடியா போர், இஸ்ரேல் – ஈரான் போர், ருவாண்டா – காங்கோ ஜனநாயக குடியரசு மோதல் ஆகியவற்றை பேச்சுவார்த்தை நடத்தி நிறுத்தி உள்ளார். இதேபோல் இந்தியா – பாகிஸ்தான், செர்பியா – கொசாவோ, எகிப்து – எத்தியோப்பியா இடையேயான மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற தனது ஆறுமாத பதவிக்காலத்தில் சராசரியாக மாதத்துக்கு ஒரு சமாதான ஒப்பந்தம் அல்லது போர் நிறுத்த மத்தியஸ்தம் செய்து வருகிறார். அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது” என இவ்வாறு தெரிவித்துள்ளார்.