ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவ அதிகாரி பெரிய அதிர்ச்சி காத்திருப்பதாக பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உலகப்போருக்கான சூழலை உருவாக்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தொடங்கிய இந்த மோதலில், இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் தொடங்கி 6 வாரங்கள் ஆகும் நிலையில், தற்போது தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த மார்ச் 26ம் தேதியன்று ஈரான் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட இருந்த தாக்குதல்களை, ஏப்ரல் 6ம் தேதி திங்கட்கிழமை வரை (நாளை) நிறுத்தி வைப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஈரான் அரசின் வேண்டுகோளை ஏற்று, அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அப்போது அவர் கூறியிருந்தார். இதற்காக 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் பாரசீக வளைகுடா பகுதியில் பறந்த அமெரிக்காவின் எப்-15 ஸ்டிரைக் ஈகிள் மற்றும் ஏ-10 தண்டர்போல்ட் ஆகிய 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானின் புஷெர் அணு உலை, எஃகு உற்பத்தி ஆலை மற்றும் முக்கிய பாலங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தின.
குறிப்பாக காரஜ் பகுதியில் உள்ள பி1 பாலத்தை அமெரிக்கா தகர்த்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீதும், ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி மையங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த இக்கட்டான சூழலில், ேநற்று அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு 48 மணி நேர அதிரடி கெடு விதித்தார். அதில், ‘ஹார்முஸ் நீர்சந்தியை மீண்டும் திறக்க ஈரான் உடன்பட வேண்டும், இல்லையெனில் நரகத்தை சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்தார்.
அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் விதிக்கப்பட்ட இந்த கெடுவானது, இலங்கை நேரப்படி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் முடிவுக்கு வருகிறது.
இந்த காலக்கெடுவுக்குள் ஈரான் பணியவில்லை என்றால் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி, ‘தெற்கு ஈரான் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அவர்களுக்கு சாதகமாக அமையாது.
அமெரிக்க ராணுவம் வைத்துள்ள இலக்குகள் அனைத்தும் அர்த்தமற்றவை. பாலம் மற்றும் மின் நிலையங்களை தகர்ப்போம் என்ற அதிபர் டிரம்ப் விடுத்த மிரட்டல், அமெரிக்காவின் விரக்தியையே காட்டுகிறது. எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை அமெரிக்காவிற்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமையும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டானில் உள்ள 8 முக்கிய பாலங்களின் பட்டியலை தயார் செய்துள்ளோம். இதில் சவுதி அரேபியா – பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹத் பாலம் மற்றும் குவைத்தின் ஷேக் ஜாபர் அல்-அகமது அல்-சபா பாலம் ஆகியவையும் அடங்கும்’ என்று அவர் கூறினார்.
ஹார்முஸ் நீர்சந்தி முடக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ஈரானுடன் சீனா உள்ளிட்ட சில நாடுகள் டிஜிட்டல் கரன்சி மூலம் வர்த்தகம் செய்ய முயன்றாலும், அந்த ஜலசந்தியை ராணுவ ரீதியாக திறக்க அமெரிக்கா தலைமையிலான 35 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. டிரம்ப் விதித்த கெடு நாளை அதிகாலை முடிய உள்ள நிலையில், ஈரான் தரப்பில் கூறப்படும் பெரிய அதிர்ச்சி என்னவாக இருக்கும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பின் பைத்தியக்காரத்தனத்தை எவராலும் தடுக்க முடியாதா?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்து சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் இயக்குநரான முகமது எல்பாரடே தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அரபு மொழியில், ‘இந்த பைத்தியக்காரர் (டிரம்ப்) இப்பகுதியை நெருப்புப் பந்தாக மாற்றுவதற்கு முன்பாக, உங்களால் முடிந்த அனைத்தையும் செய்து போரைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்று வளைகுடா நாட்டுத் தலைவர்களிடம் அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், உலக நாடுகளின் அமைப்பிற்கு அவர் விடுத்துள்ள மற்றொரு செய்தியில், ‘இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த யாராலும் ஒன்றும் செய்ய முடியாதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரான் ராணுவ தளபதிகள் பலி;
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது அமெரிக்கா நடத்திய பிரம்மாண்ட வான்வழித் தாக்குதலில், அந்நாட்டு ராணுவத்தின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இருள் சூழ்ந்த பகுதியில் போர் விமானங்கள் பறக்கும் சத்தமும், மிகப்பெரிய குண்டுகள் வெடிக்கும் சத்தமும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது பதிவில், ‘ஈரான் நாட்டை தவறான பாதையில் வழிநடத்திச் சென்ற அந்த நாட்டு ராணுவத் தலைவர்கள் பலர், டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட தாக்குதலில் அதிரடியாக கொல்லப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து இன்னும் பல முக்கிய இலக்குகளும் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதலின் தொழில்நுட்ப விவரங்கள் குறித்தோ அல்லது பலியானவர்களின் எண்ணிக்கை குறித்தோ அமெரிக்க தரப்பில் விரிவான விளக்கம் இன்னும் அளிக்கப்படவில்லை.


