உலகிலேயே முதன் முறையாக டிரைவர் இல்லாத பஸ் சேவை, ஸ்காட்லாந்தில் அடுத்த வாரம் துவங்க உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்து உள்ளது. இங்கு, டிரைவர் இல்லாத பஸ் சேவையை அடுத்த வாரம் துவங்க, பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தானியங்கி பயணியர் பஸ் இயக்கப்படுவது, உலகிலேயே இதுதான் முதன்முறை. ‘சென்சார்’கள் பொருத்தப்பட்ட இந்த பஸ்கள், மணிக்கு, 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
அதே நேரத்தில், முழு அளவிலான தானியங்கி பஸ் சேவைக்கு அரசு அனுமதி தராததால், ஒவ்வொரு பஸ்சிலும் பாதுகாப்புக்காக டிரைவர் இருப்பார்.
அவர், பஸ்சின் இயக்கத்தை கண்காணிப்பார். தேவைப்படும் நேரத்தில், பஸ்சை அவர் இயக்கி கட்டுப்படுத்துவார். மேலும், பயணியருக்கு பயணச்சீட்டு வழங்க, நடத்துனரும் பஸ்சில் இருப்பார்.
இந்த தானியங்கி பஸ்கள், செயற்கை நுண்ணறிவு இயந்திரம் வாயிலாக இயக்கப்படும். இது, பாதுகாப்பான வழிகளை கண்டறிந்து, பஸ் இயங்க வழிவகை செய்கிறது.
இந்த சேவை பாதுகாப்பானதாகவும், எரிபொருள் சிக்கனமானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.