2024 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே மாபெரும் வரலாற்று சாதனை படைத்தது அமெரிக்க அணி. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆரோன் ஜோன்ஸ் ஆடிய ஆட்டத்தால் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த அமெரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆரோன் ஜோன்ஸ் 10 சிக்ஸர் அடித்து டி20 உலக கோப்பை வரலாற்றில் மிகப்பெரும் சாதனையை செய்தார். அதில் 103 மீட்டருக்கு மேல் அடித்த ஒரு சிக்ஸ் மைதானத்தை விட்டு வெளியே சென்றது. இதை அடுத்து ஆரோன் ஜோன்ஸ் அமெரிக்காவின் நாயகனாக மாறினர்.
இந்தப் போட்டியில் கனடா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் நவ்நீத் 61, நிக்கோலஸ் கிர்ட்டன் 51. ஸ்ரேயாஸ் மவ்வா 32 ரன்கள் சேர்த்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் சேர்த்தது. மிகப்பெரிய இலக்கை நோக்கி அமெரிக்க அணி சேஸிங் செய்தது. அந்த அணி முதல் 8 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்களை இழந்து இருந்தது.
அப்போது ஆரோன் ஜோன்ஸ் மற்றும் ஆண்ட்ரியாஸ் களத்தில் இருந்தனர். இருவரும் அதிரடியாக ரன் குவிக்கத் துவங்கினர். ஆண்ட்ரியாஸ் 46 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். ஆரோன் ஜோன்ஸ் முதலில் நிதான ஆட்டம் ஆடினாலும், அதன் பின் சிக்ஸர் மழை பொழிந்தார். அவரது அதிரடியால் 13 மற்றும் 14 ஆவது ஓவர்களில் மொத்தமாக 53 ரன்கள் குவித்தது அமெரிக்க அணி.
ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 94 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் நான்கு ஃபோர், பத்து சிக்ஸ் அடித்து இருந்தார். இதை அடுத்து வெற்றி பெற வாய்ப்பில்லை என கருதப்பட்ட அமெரிக்கா அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 10 சிக்ஸ் அடித்த ஆரோன் ஜோன்ஸ் டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
கிறிஸ் கெயில் ஒரு முறை ஒரே போட்டியில் 11 சிக்ஸர்களும், மற்றொரு போட்டியில் 10 சிக்ஸர்களும் அடித்து இருந்தார். அந்த சாதனையை நெருங்கிய ஆரோன் ஜோன்ஸ் 10 சிக்ஸர்கள் அடித்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.
உலகக்கோப்பை வரலாற்றில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ரன் சேஸ்களில் துவக்க வீரராக அல்லாத வீரர் ஒருவர் அடித்த அதிக ரன்கள் என்ற சாதனையை செய்து இருக்கிறார் ஆரோன் ஜோன்ஸ். மேலும், உலகக் கோப்பையில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த துவக்க வீரர் அல்லாத வீரர் என்ற வரலாற்று சாதனைகளையும் நிகழ்த்தினார்.