2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு தொடர்பான விஷேட செயலமர்வு இன்று புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் பொது அதிகாரிகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில், புத்தளம் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்), தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி ஆலோசகர் திருமதி புபுதிகா எஸ். பண்டார அவர்களினால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது, எவ்வாறு அணுகுவது மற்றும் எவ்வாறான விடயங்களுக்கு என்னென்ன அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்ககளிடமிருந்து விடயங்களை பெற்றுக்கொள்வது தொடர்பான மிக நீண்ட தெளிவு புத்தளம் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர் அவர்களினால் வழங்கப்பட்டது.
குறித்த செயலமர்வில் மட்டுப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள், தொண்டு நிறுவன சிரேஷ்ட உறுப்பினர்கள், சிவில் அமைப்பினர்கள் மற்றும் அரச நிறுவன அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தகவல் அறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை கிராமிய மட்டங்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், புத்தளம் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க கிராமங்களில் இவ்வாறான நிகழ்ச்சி திட்டங்களை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேக்கொள்ள உதவுமாறு ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி ஆலோசகர் திருமதி புபுதிகா எஸ். பண்டார அவர்களினால் அனுமதி வழங்கபட்டது.
குறித்த கிராமிய மட்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் தாம் வழங்குவதாக திருமதி புபுதிகா எஸ். பண்டார உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
