கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளதாக கிரேண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர், 54 வயதுடைய அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தந்தையின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குற்றத்தைச் செய்த 20 வயதுடைய உயிரிழந்தவரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரேண்ட்பாஸ் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.