அரச சேவையில் ஆட்சேர்ப்புகளின் போது எவ்வித அரசியல் தலையீடுகளோ அல்லது அமைச்சர்களின் பெயர்ப்பட்டியலோ சமர்ப்பிக்கப்படமாட்டாது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கைத் தபால் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் – III தர தபால் சேவை அதிகாரி பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 326 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (28) முற்பகல் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தபால் திணைக்களத்தின் 600 வெற்றிடங்களுக்காக சுமார் 20,000 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில், தகுதிகளைப் பூர்த்தி செய்த 326 பேர் முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த அதிகாரிகள், மாகாண மட்டத்தில் உள்ள தபால் பயிற்சி நிறுவனங்களில் இரண்டு வார கால விசேட பயிற்சியினைப் பெற்ற பின்னர், அந்தந்த தபால் அலுவலகங்களில் பணிக்காக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ;
தற்போதைய அரசாங்கம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனங்களை வழங்குகிறது. பகிரங்க விண்ணப்பம் கோரல், போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன.
2025 மார்ச் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரச சேவையில் இணைந்தவர்களுக்கு நிலவிய ஓய்வூதிய நிச்சயமற்ற தன்மை நீக்கப்பட்டு, அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் அவர்களுக்கான ஓய்வூதிய உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பல வருடங்களாக PL (Primary Level) பிரிவின் கீழ் பணியாற்றி, பல்வேறு காரணங்களால் நிரந்தர நியமனம் கிடைக்காதிருந்த பத்தாயிரக்கணக்கான ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கான அமைச்சரவை யோசனை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.
மேலும் தபால் சேவையை நவீனமயமாக்குவதற்காக அரசாங்கம் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்படி:
- புதிய கட்டிடங்களுக்காக 600 மில்லியன் ரூபாயும், பழைய கட்டிடங்களைப் புனரமைக்க மேலதிகமாக 600 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்த 590 மில்லியன் ரூபாய் செலவில் 10 லொறிகள் மற்றும் 20 குரூ-கப் (Crew Cab) வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
- திறன் அபிவிருத்திக்காக 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆண்டு தபால் திணைக்களம் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை நோக்கிப் பயணிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், புதிய அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, அமைச்சின் மேலதிக செயலாளர் தீபா லியனகே, தபால் மா அதிபர் ருவன் சத்குமார மற்றும் பிரதி தபால் மா அதிபர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.





