புத்தளம் தள வைத்தியசாலையை தரமுயர்த்த அவசரமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் தள வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக, ஜனாதிபதி அவர்களிடம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், விடுத்த வேண்டுகோளையடுத்து, ஜனாதிபதி அவர்கள் அமைச்சர்களான நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பேராசிரியர் சந்தன அபேரத்ன ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக, பாராளுமன்ற உணவகத்தில் பிரதமர், இவ்விரு அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்த வேளையில் அவ்விடத்திற்கு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் சென்று ஜனாதிபதியிடம் மேற்படி புத்தளம் வைத்தியசாலை விடயமாக பேசியுள்ளார்.
இதன்போது உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த ஏற்பாடுகளைச் செய்யுமாறு சுகாதார அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியதோடு, மாகாண நிதி ஒதுக்கீட்டில் அதிக முன்னுரிமையை புத்தளம் தள வைத்தியசாலைக்கு வழங்குமாறு அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்னவிடமும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை புத்தளம் தல வைத்தியசாலை குறித்து வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசியது புத்தளம் வைத்தியசாலை விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்ல உதவியாக இருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



