வடக்கு மாகாணத்தில், அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம். எங்கள் திறமையான இளைஞர்கள், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் எங்கள் மக்களின் உறுதியுடன், இலங்கையின் கல்விக்கான புதிய அத்தியாயத்தில் வடக்கு மாகாணம் ஒரு வெற்றியின் முன்மாதிரியாக இருக்கும் என நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பிலான மாகாணமட்டக் கலந்துரையாடல் பிரதமரும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை (02.08.2025) நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய ஆளுநர், நாட்டின் பெருமைமிகுந்த மற்றும் மீள்தன்மை கொண்ட எங்கள் பிராந்தியத்துக்கு உங்களை வரவேற்கின்றேன். தேசிய ஒற்றுமை, சம வாய்ப்பு மற்றும் எந்த மாணவனும், எந்தப் பாடசாலையும், எந்த மாகாணமும் பின்தங்கியிருக்காத எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புக்கான உங்கள் செய்தி மிகப்பெரியது.
இன்று, வடக்கு மாகாண மாணவர்களுக்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் நம்பிக்கையைத் தரும் ஒரு துணிச்சலான கல்வி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் உங்கள் தொலைநோக்குத் தலைமையை நாங்கள் பாராட்டுகின்றோம்.
ஒவ்வொரு மாணவனும் தங்கள் கல்வியை முடிக்கவும், அவர்கள் விரும்பும் எதிர்காலத்தைத் தொடரும் வாய்ப்புக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலான ஒருங்கிணைந்த தொழில் மற்றும் கல்விப் பாதைகளுடன் கல்வி முறையை மறுசீரமைத்தல் சிறப்பானது.
பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடுகளை பரீட்சைப்புள்ளிகளுடன் சமநிலைப்படுத்தும் மிகவும் நெகிழ்வான மதிப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்துவது, மாணவர்கள் மீதான தேவையற்ற போட்டி மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
எண்ணிமப்படுத்தலை (டிஜிட்டல் மயமாக்கல்) புகுத்துவதன் மூலம் வடக்கு மாகாணம் போன்ற கல்வி இடைவெளிகள் அதிகமாகவுள்ள மாகாணங்கள் மிகப்பெரிய நன்மையடையும்.
இந்தச் சீர்திருத்தங்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவை கொள்கை மாற்றங்களை மட்டும் பிரதிபலிக்கவில்லை. நீதி, உள்ளடக்கம் மற்றும் சமமான வளர்ச்சிக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் சமூகங்களுக்கான நம்பிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, என்றார் ஆளுநர்.
இங்கு உரையாற்றிய பிரதமர் அவர்கள், இந்தக் கலந்துரையாடலை ஒழுங்குபடுத்திய வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் அவர்தம் நிர்வாகக் கட்டமைப்பினருக்கு முதலில் நன்றிகளைக் கூறுகின்றேன்.
கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. ஏனெனில் வலிகள் நிறைந்த காலத்திலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் நீங்கள். வடக்கு மாகாணம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. ஏன் இந்த நிலைமை என்று சிந்திக்கவேண்டும்.
தற்போதுள்ள கல்வி முறைமை எல்லோருக்கும் சமனானதாகத் தெரியவில்லை. பணம் சார்ந்த சுமைகளை பெற்றோருக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. பரீட்சை மையக் கல்வியானது மாணவர்களை முடக்கியுள்ளது. எனவே, அவசியமான இந்தக் கல்விச் சீர்திருத்தம் கட்டம் கட்டமாகவே மேற்கொள்ளப்படும். 2026ஆம் ஆண்டு தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் எல்லோரும் யாழ்ப்பாண நகரத்தில் வேலை செய்வதற்கு ஆசைப்படுகின்றார்கள். ஏனைய மாவட்டங்களுக்கும் அதுவும் குறிப்பாக எல்லை நிலையிலுள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயறப்படவேண்டும், என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து கல்வி சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், நிரல் கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண கல்விப் பணிப்பாளர், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.