சஜாத் – பிராந்திய செய்தியாளர்
ஏற்பட்ட டித்வா சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் கல்பிட்டி – ஏத்தாளை பகுதியும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
நாட்டின் எல்லா பாகங்களிலும் வெள்ள நீர் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் கல்பிட்டி – ஏத்தாளை பகுதியில் உள்ள தளவில பிரதான வீதியில் சுமார் 500 மீட்டருக்கும் அதிக தூரத்திற்கு குறித்த வெள்ள நீர் தேங்கி நிற்பதால், குறித்த வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்களும் பெரும் அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறித்த விடயம் அறியத்தந்தும் பாராமுகமாக செயற்படுவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன், வெள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
முறையான வடிகான் வசதி இல்லாததால் மழை காலங்களில் குறித்த பகுதியில் இவ்வாறு அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படுவதாகவும், வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான முறையான பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டு, வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
பல போராட்டங்களுக்கு மத்தியில் மின்சார வாரியத்தின் பவுசர் மூலம் நீரை அகற்றுவதற்கு தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், இதற்கான நிரந்தர தீர்வை கோரி பிரதேச மக்கள் போராட்டம் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





