நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலை மையப்படுத்தி வன்னி,கம்பஹா, கொழும்பு, களுத்துறை,பதுளை ஆகிய மாவட்டங்களில் கட்சியின் பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு , ஆட்சி அமைப்பில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் தாருஸ் ஸலாம்” தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்றது.
தற்போதைய அரசியல் கள நிலைவரம் தொடர்பில் மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் அடங்கலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் பங்குபற்றலுடன் கட்சியின் தலைமையகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக மன்னார் பிரதேச சபைக்கான கட்சியின் போனஸ் ஆசனம் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதுடன், எருக்கலம்பிட்டி வட்டாரத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று சரித்திர வெற்றிபெற்ற மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் இஸ்மாயீல் இஸ்ஸதீன் கட்சியின் தலைமையினால் வெகுவாக பாராட்டப்பட்டார்.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், எம்.எஸ்.எம்.அஸ்லம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷாத் நிஸாம்தீன், ஷாபி ரஹீம் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
