உலகம் முழுவதும் அச்சுறுத்தும் பிரச்சனையாக மாரடைப்பு பிரச்சனை இருக்கிறது. மற்ற நாட்களை விட திங்கட்கிழமைகளில்தான் மாரடைப்பு அதிக அளவில் ஏற்படுகிறது என்று தற்போது ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான ஆய்வுகள் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகியிருப்பினும், தற்போது மீண்டும் கவனம் பெற்று வருகிறது. பெல்ஃபாஸ்ட் ஹெல்த் மற்றும் சோஷியல் கேர் டிரஸ்ட் மற்றும் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் இன் அயர்லாந்து ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
STEMI எனப்படும் தீவிர மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 10,528 நோயாளிகளின் மருத்துவ பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். 2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அயர்லாந்து தீவு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் தரவுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
STEMI என்பது இதயத்திற்கு இரத்தம் வழங்கும் முக்கிய கரோனரி தமனி முழுவதுமாக அடைக்கப்படும்போது ஏற்படுகிறது. இந்த சமயத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிர் போய்விடும். இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 30,000-க்கும் அதிகமானோர் STEMI காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சிகிச்சை மூலம் அடைபட்ட கரோனரி தமனியைத் திறந்து, இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். பிரச்சனை என்னவெனில், வாரத்தின் தொடக்கத்தில் அதாவது திங்கட்கிழமைகளில் STEMI மாரடைப்பு விகிதம் அதிகரிப்பதை அவர்கள் கண்டறிந்தனர். திங்கட்கிழமைகளில் இது மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 13% அதிகமாக இருந்தது.
அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் STEMI விகிதம் அதிகமாக இருந்தது. இப்படி திங்கட்கிழமைகளில் மாரடைப்பு ஏற்படுவதை ‘ப்ளூ மண்டே’ என்று அழைப்பார்கள். இந்த விளைவுகளுக்கு பின்னால் உள்ள காரணம் இன்னும் முழுயைமாக தெரியவில்லை.
இது உடலின் சர்க்காடியன் ரிதம் எனப்படும் தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய இருதயவியல் நிபுணர் டாக்டர் ஜாக் லஃபான் கூறுகையில், “வாரத்தின் தொடக்கத்திற்கும், மாரடைப்புக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதாக நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
இந்த தொடர்பு ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கலாம். முந்தைய ஆய்வுகளின் அடிப்படையில், சர்க்காடியன் ஒரு காரணமாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார். பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் மருத்துவ இயக்குனர் பேராசிரியர் சர் நிலேஷ் சமனி, இதுபற்றி கூறுகையில், “இங்கிலாந்தில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
எனவே மாரடைப்பு எப்படி, ஏன் ஏற்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவது முக்கியம். இந்த ஆய்வு தீவிரமான மாரடைப்புகளின் நேரத்தைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. ஆனால், வாரத்தின் சில நாட்களில் அவை ஏன் அதிகமாக நிகழ்கின்றன என்பதை நாம் கண்டறிய வேண்டும். இதன் மூலம் இந்த ஆபத்தான நிலையைப் பற்றி மருத்துவர்கள் நன்கு புரிந்துகொள்ளவும், அதிக உயிர்களைக் காப்பாற்றவும் முடியும்” என்று கூறியுள்ளார்.
ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலும் விடுமுறை என்பதால் மது, பார்டி, இதர போதை பழக்கங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே தூக்கம் பாதிக்கப்படுகிறது. உடல் சோர்வாகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இதே நடக்கும்போது அது, உடலுக்கு ஆபத்தாக முடிகிறது. திங்கட்கிழமையில், அலுவலக அழுத்தம், வேலைக்கு போவது, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது உடல் திணறுகிறது. இதுகூட மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இதுமட்டும்தான் முழுமையான காரணமாக சொல்லிவிட முடியாது என்றும் சிலர் கூறுகின்றனர்.
எது எப்படி இருப்பினும் மது, சிகிரெட் இதர போதை பழக்கங்கள் இல்லாததே சிறந்த வாழ்க்கையாகும்.