திபெத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 126 பேர் பலியாயினர்; 188 பேர் படுகாயம் அடைந்தனர். அண்டை நாடான நேபாளத்திலும், இது பெரிதும் உணரப்பட்டது.
சீனாவின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஜிகாசே மாகாணத்தின் டிங்கிரி பகுதியில், நேற்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோளில், 6.8 அளவுக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, சீனவின் மண்டல பேரழிவு மீட்புத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், 7.1 ரிக்டர் அளவுக்கு இருந்ததாக, அமெரிக்க புவியியல் சேவை துறை தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி, இந்தியாவின் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. இந்த டிங்கிரி பகுதி, திபெத்தின் புனித இடமாக கருதப்படுகிறது. திபெத்திய புத்த மதத்தின் தலைவரான தலாய் லாமாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாக கருதப்படுகிறது.
உடனடி நிவாரணம்
இங்கு, 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டன. இதில், 126 பேர் உயிரிழந்ததாகவும், 188 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சீன அரசு கூறியுள்ளது.
நிலநடுக்கத்தில் அதிகமானோர் உயிரிழந்ததற்கு, சீன அதிபர் ஷீ ஜின்பிங் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில மணி நேரத்துக்கு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும்படி, சீன அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, மீட்பு பணிகளில், 1,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில், 2015ல் 8.1 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது, திபெத்திலும் அதன் தாக்கம் இருந்தது. திபெத்தில், எட்டு பேர் உயிரிழந்தனர், 55 பேர் காயடைந்தனர்.
பாதிப்பில்லை
இந்நிலையில், திபெத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், அதன் அண்டை நாடான நேபாளத்திலும் உணரப்பட்டது. அங்கும் பல கட்டடங்கள் குலுங்கியதாகவும், சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நில நடுக்கத்தின் அதிர்வு, நம் நாட்டின் பீஹார் மற்றும் டில்லி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது.
சீனாவில் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கங்கள்:
2008, மே — சிசுவான்; 7.9 ரிக்டர் அளவு; 90,000 பேர் பலி2010, ஏப்., – கின்காய்; 7.1 ரிக்டர் அளவு; 2,698 பேர் பலி2013 ஏப்., – சிசுவான்; 7 ரிக்டர் அளவு; 196 பேர் பலி2013, ஜூலை – கான்சு; 6.6 ரிக்டர் அளவு; 95 பேர் பலி2014, ஆக., – யூனான்; 6.1 ரிக்டர் அளவு; 617 பேர் பலி2022, செப்., – சிசுவான்; 6.8 ரிக்டர் அளவு; 93 பேர் பலி2023, டிச., – குயின்காய்; 6.2 ரிக்டர் அளவு, 126 பேர் பலி.