பல வருட காலமாக திறக்கப்படாத ஆயுர்வேத வைத்தியசாலை
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையினரால் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை ஏழு வருடம் கடந்த நிலையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாது குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த கட்டிடம், கால்நடைகளின் தங்குமிடமாகவும், பட்டறை காடாகவும் காட்சியளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ் வைத்தியசாலை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 16 கிராம மக்கள் பயன் தரக்கூடிய வகையில் நவீன ஆயுர்வேத வைத்தியசாலையாக நிர்மாணிக்கப்பட்ட போதிலும் இன்றுவரை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாத நிலையில் இருப்பதையிட்டு மக்கள் கவலை தெரிய்விக்கின்றனர்.
இதனை மிக விரைவில் மக்களினது பாவானைக்கு கையளிக்க வேண்டுமென இப்பகுதியில் வாழும் பொது அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தற்பொழுது அதிகளவாக ஆயுர்வேத வைத்தியசாலையையே நாடி வருகின்றமையால் குறித்த பகுதியில் உள்ள மக்கள் புதுக் குடியிருப்பு, பரந்தன் ஆகிய பகுதிகளுக்கே பல சிரமங்களுக்கு மத்தியில் ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சொந்த இடத்தில் நவீன ஆயுர்வேத வைத்தியசாலை கட்டிடம் இருந்தும் வெளி பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலையை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் குறித்த ஆயுர்வேத வைத்திய சாலையை எமது பயன்பாட்டுக்கு விரைவாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்