தீபாவளியை முன்னிட்டு அயோத்தியின் சரயு நதிக்கரையில் 26 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு, கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு 26 லட்சம் விளக்குகள் ஏற்றும் நிகழ்வை உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்தது.
பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள், 10,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், இதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சரயு நதிக்கரையில் சுமார் 26 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.
நிகழ்வில் கலந்து கொண்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விளக்கு ஏற்றி தீப உற்சவத்தை தொடங்கி வைத்தார்.
இதற்கு முன்னர் 25 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் உலக சாதனையாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு 26 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மேலும், தீப உற்சவத்தை முன்னிட்டு சரயு நதிக்கரையிலும் வண்ண ஒளி லேசர் நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை நிகழ்வுகள் பார்ப்போரின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் இருந்தது.