- தீவிரமடையும் ‘மொனாப்’ புயல்: 12 மாவட்டங்கள் பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு – களத்தில் முப்படை!
- ரெட் அலர்ட் எச்சரிக்கை: பெருக்கெடுக்கும் ஆறுகள், கதவுகள் திறக்கப்பட்ட நீர்த்தேக்கங்கள் – கலங்கும் இலங்கை!
- நாடு முழுவதும் இயற்கை அனர்த்தம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு; மலைநாட்டு புகையிரத சேவை முடங்கியது!
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தீவிர சூறாவளி வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மொனாப்’ (Monab) சூறாவளியாக வலுப்பெற்று நகர்ந்து வருவதால், நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலை தொடர்கின்றது. இந்த சூறாவளியின் நேரடித் தாக்கம் இலங்கை மீது முழுமையாக இல்லை என்ற போதிலும், அதனை நோக்கி ஈர்க்கப்படும் காற்று சுழற்சியால் தென்மேற்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழையுடனான கொந்தளிப்பான வானிலை நீடித்து வருகின்றது.
12 மாவட்டங்களை உலுக்கிய அனர்த்தம்: உயிரிழப்பும் பாதிப்புகளும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நிலைவர அறிக்கையின்படி, நாட்டின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 57 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,736 குடும்பங்களைச் சேர்ந்த 10,545 நபர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் – மாதம்பே பகுதியில் வெள்ள நீரில் மூழ்கி 56 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், இங்கிரிய பகுதியில் வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் குடும்பத்தலைவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, நாடு முழுவதும் 215 வீடுகள் பகுதியளவிலும், 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
ஆறுகள் பெருக்கெடுப்பு – திறக்கப்பட்ட நீர்த்தேக்க வான் கதவுகள் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரத்தினபுரி சமனலகம பகுதியில் அதிகபட்சமாக 185.4 மி.மீ மழையும், பலாங்கொடை, பாஹியன்கல உள்ளிட்ட பல இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மழையும் பதிவாகியுள்ளது. இதனால் களு கங்கையின் நீர்மட்டம் இரத்தினபுரியில் சிறு வெள்ள மட்டத்தை எட்டியுள்ளதுடன், களு மற்றும் மஹாவலி கங்கைப் படுக்கைகளின் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 18 வான் கதவுகளும், தெதுரு ஓயாவின் 8 வான் கதவுகளும், தபோவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
மண்சரிவு அபாயம் மற்றும் முடங்கிய போக்குவரத்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, களுத்துறை, நுவரெலியா உள்ளிட்ட மலைநாட்டுப் பகுதிகளில் கடுமையான மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து உடரட்ட புகையிரத பாதையில் கம்பளையிலிருந்து நானுஓயா வரையான பகுதியிலும், பேராதனையிலிருந்து மாத்தளை வரையான பகுதியிலும் புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், படகுகள் மூலம் அவசர உதவிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடல் கொந்தளிப்பு எச்சரிக்கையும் களமிறக்கப்பட்டுள்ள மீட்புப் படைகளும் கடலில் காற்றின் வேகம் மணிக்கு 80 தொடக்கம் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் மறு அறிவித்தல் வரும் வரை கடற்பரப்புகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த நிலமைகளை எதிர்கொள்ளவும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும் முப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ரத்மலானை, பலாலி, கொக்கல, ஹிகுரக்கொட, சீனக்குடா உள்ளிட்ட தளங்களில் விமானப்படையின் மீட்பு ஹெலிகொப்டர்களும், மீட்புப் படகுகளுடன் ஆயுதப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.



