மீரிகம, ஏக்கர் 20 பகுதியில் உள்ள துரியன் (முள்நாறி) தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மீரிகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட காவலாளி மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 2025.01.01 முதல் 2025.07.13 வரை பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 50 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடையவை என்றும், ஏனைய 18 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேற்படி 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் 34 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும், துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 30 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.