இந்திய ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்த ரோஹண விஜேவீரவின் கொள்கையைப் பின்பற்றும் கட்சியின் தலைவரது ஆட்சியில் இலங்கையின் மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் அந்நாட்டிடம் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
எட்கா ஒப்பந்தத்தின் ஊடாக எதிர்கால சந்ததியினரின் தொழில் வாய்ப்புக்களை பறிப்பதற்கான சதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உயர் வலு மின் தொகுப்பை நிறுவ இணக்கம் காணப்பட்டதாக இரு தலைவர்களதும் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பல்பொருள் குழாய் அமைக்கும் திட்டத்தின் ஊடாக எரிபொருள் மற்றும் திரவ நிலை இயற்கை எரிவாயு பரிமாற்றத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது மேலதிக மின்சாரம் காணப்படுவதால் அதனை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு இது சிறந்த வாய்ப்பாகும் என்று அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இன்று மின்சாரம் தேவைக்கதிகமானதாக இருந்தாலும் நாடு அபிவிருத்தியடையும் போதும் அதனைப் பயன்படுத்த முடியும்.
அத்தோடு அவசர நிலைமைகளின் போது இந்தியாவிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்து கொள்வதற்கும் இந்த திட்டம் உதவும் என்றும் கூறப்படுகிறது.
பங்களாதேஷ் அவசர நிலைமையின் போது அதானியிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்தது. பின்னர் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டதால், முழு நாடும் இருளடைந்தது.
இலங்கையிலும் தற்போது வலுசக்தி துறையுடன் விளையாட ஆரம்பித்துள்ளனர். இது மிகவும் பாரதூரமானதாகும். எதிர்காலத்தில் மின்சாரத்துக்காக இந்தியாவிடம் கையேந்த வேண்டிய நிலைமைக்கு உள்ளாக்குவதற்கான நடவடிக்கைகளே இதன் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.
அரசியல், கலாசார, வலுசக்தி மற்றும் பொருளாதார ரீதியில் இலங்கையுடன் இணைப்பை ஏற்படுத்த விரும்புவதாக இந்தியா குறிப்பிடுகிறது. மலிவான, நம்பகமான எரிசக்தியை வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பல்பொருள் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான ஒத்துழைப்பு என்ற ஒரு விடயமும் அந்த கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் ஊடாக எரிபொருளுக்காகவும் நாம் முழுமையாக இந்தியாவை தங்கியிருக்க வேண்டிய நிலைமையே ஏற்படும். தற்போது இந்தியா, ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளைப் பெற்று அதனை சுத்திகரித்து லங்கா ஐ.ஓ.சி.க்கு வழங்குகிறது. இதன் ஊடாக ஐ.ஓ.சி.க்கு பாரிய இலாபம் கிடைக்கின்றது. எனவே மேற்குறிப்பிடப்பட்ட இந்த குழாய் திட்டம் ஒருபோதும் இலங்கையின் எரிபொருள் துறைக்கு பாதுகாப்பானதாக அமையப்போவதில்லை. அது மாத்திரமின்றி தோல்வியடைந்த வலுசக்தி துறையை தோற்றுவிப்பதாகவும் இத்திட்டம் அமையும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணங்கிய விடயங்களையே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார். எதிர்காலத்தில் இந்தியாவுக்கு சாதகமான ஆட்சி முறை இலங்கையில் ஏற்படாவிட்டால், அதில் தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு இந்த குழாய் திட்டங்களைப் பயன்படுத்தக் கூடும். மாலைத்தீவில் இந்தியாவை விட சீனாவுக்கு சாதகமான ஆட்சி ஏற்பட்டமையால் இந்திய சுற்றுலாப்பயணிகள் அந்நாட்டுக்கு செல்வது கூட தடுக்கப்பட்டது.
இந்திய ஆக்கிரமிப்பு தொடர்பில் இலங்கைக்கு கற்றுக் கொடுத்த ரோஹண விஜேவீரவின் நாமத்தைப் பயன்படுத்துபவர்களின் ஆட்சியின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமையே பாரிய பேரிடராகும். இலங்கையின் வலுசக்தி துறையில் தலையிடுவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனக் கூறியவர்கள், இன்று இந்தியாவுக்கு சென்று வலுசக்தி மற்றும் மின்சக்தி துறையை காட்டிக் கொடுத்துள்ளனர்.
இதேவேளை எட்கா ஒப்பந்தம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்திய தொழிலாளர்கள் இலங்கையின் தொழில் சந்தைகளுக்குள் கட்டுப்பாடின்றி பிரவேசிக்க முடியும்.
தமிழ்நாட்டிலுள்ள ஒருவர் எவ்வாறு கடவுச்சீட்டு இன்றி டில்லிக்கு சென்று தொழிலில் ஈடுபட முடியுமோ, அதேபோன்று இலங்கைக்குள்ளும் பிரவேசிக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.
எட்கா தொடர்பில் பேச வேண்டிய தேவை கூட இல்லை. அது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தால் அதற்கு இணங்க வேண்டியேற்படும். அவ்வாறு இணங்கினால் இந்தியாவிலிருந்து குறைந்த செலவில் இலங்கைக்கு மனித வளங்கள் இறக்குமதியாகும். இது பாரதூரமானதாகும்.
பொது மக்கள் இது தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கான தொழில் வாய்ப்புக்களை பறிப்பதற்கான ஆரம்பமே இதுவாகும். இதற்கு எதிராக நாம் குரல்கொடுப்போம் என்றார்.