செய்தித் தகவல்: ஜூட் சமந்த
தெற்காசிய பிராந்தியத்தில் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கு வலுவான சட்டக் கட்டமைப்பு அவசியமெனவும், இதற்காகப் பிராந்திய நாடுகளுக்கிடையே முறையான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பில் அண்மையில் நடைபெற்ற “தெற்காசியாவில் மனிதக் கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தலைத் தடுத்தல்” தொடர்பான விசேட கருத்தரங்கின் போதே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் (UNODC) இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய UNODC திட்ட ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் ரீவ் (Martin Reeve) பின்வருமாறு குறிப்பிட்டார்:
“சட்டவிரோதக் குடியேற்றம் என்பது மிகவும் அபாயகரமான ஒரு செயலாகும். இதன் காரணமாக ஏற்கனவே பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. இந்த அபாயகரமான சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக, தெற்காசிய பிராந்திய நாடுகளின் அரச பிரதிநிதிகளுக்கிடையே இதற்கான அவசர புரிந்துணர்வும் இணக்கப்பாடும் அவசியமாகிறது.”
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், தெற்காசியாவின் இலங்கை, இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய 6 நாடுகளை உள்ளடக்கி, இந்த சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுப்பதற்கான மூன்று ஆண்டு காலத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது ஒரு பாரிய வணிகக் குற்றம்
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த UNODC தெற்காசிய பிராந்திய அலுவலகத்தின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் அனுஷா முனசிங்க, சட்டவிரோதக் குடியேற்றங்கள் தற்போது ஒரு பாரிய ‘வணிகமாக’ உருவெடுத்துள்ளதாகக் கவலை வெளியிட்டார்.
“சட்டபூர்வமான புலம்பெயர்வு என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சட்டவிரோதமான முறையில் மனிதர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை ஒரு குற்றச்செயலாகவே நாம் கருதுகிறோம். மனித உழைப்பை தவறான முறையில் வெளிநாடுகளுக்குக் கடத்தும் போது, பலரது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
தற்போதுள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால், இத்தகைய குற்றங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப் போதுமான சட்டக் கட்டமைப்புகள் இல்லாமையே ஆகும். இதனால் குற்றவாளிகளைத் தண்டிப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. எனவே, கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் சட்ட ரீதியான பாதுகாப்பு வளையங்களை உருவாக்க தெற்காசிய நாடுகள் ஒன்றிணைவது மிக முக்கியமானது,” என அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து அந்தந்த நாட்டுத் தலைவர்களுடன் வரும் நாட்களில் விரிவாகக் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



