18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 6.30 நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 294 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 231 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதனிடையே ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும், காங்கிரஸ் ஒரு அணியாகவும், பா.ஜ.கவோடு தெலுங்கு தேசம், ஜன சேனா உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும் களம் கண்டனர். ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், தெலுங்கு தேசம் 142 தொகுதிகளில் முன்னிலையில் வகித்து ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது.
இதில் நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், பிதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் எக்ஸ் வலைத்தளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 1,07,250 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்துப்பூர் தொகுதியில் ஏற்கெனவே 2014 மற்றும் 2019 ஆகிய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.