பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நேற்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று பிற்பகல் 5.45 மணிக்கு இடம்பெற்றதுடன், இதில் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 151வாக்குகள் அளிக்கப்பட்டன. இதற்கு எதிராக எந்த வாக்கும் அளிக்கப்படவில்லை.
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் 115 பேரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் 25ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தின் பின்னர் குழு நிலையில் சட்டமூலம் ஆராயப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டையடுத்து வாக்கெடுப்பு இன்றி இச்சட்டமூலம் நேற்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.