கராச்சியில் உள்ள குல் பிளாசா வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது,
சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா, 65 பேர் இன்னும் காணவில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் கம்ரான் டெசோரி இந்த எண்ணிக்கை 70-க்கும் மேல் இருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆளுநர் இதனை ஒரு “தேசியப் பேரிடர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீட்புப் பணிகள் மந்தமாக நடப்பதாகத் தெரிவித்துள்ளனர். தனது குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரைத் தேடிக்கொண்டிருக்கும் கோசர் பானோ, இனி அவர்களை உயிருடன் மீட்போம் என்ற நம்பிக்கை இல்லை என்றும், அவர்களின் உடல் பாகங்களையாவது அடையாளம் காண முடியுமா என்று ஏங்குவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்தத் தீ விபத்து பல வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முழுமையாக அழித்துள்ளது.
20 ஆண்டுகால கடின உழைப்பு வீணாகிவிட்டதாகக் கடைக்காரர் யாஸ்மின் பானோ கவலை தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு தொடங்கிய இந்தத் தீயை அணைக்க சுமார் 36 மணி நேரம் ஆனது, ஆனால் திங்கட்கிழமை மீண்டும் சில பகுதிகளில் தீப்பிழம்புகள் தென்பட்டன,.
கட்டிடம் தற்போது மிகவும் பலவீனமாக இருப்பதால் அது எந்த நேரத்திலும் இடியக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தீ விபத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டாலும், தற்போது இது குறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.
கராச்சியில் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் காரணமாக அடிக்கடி இத்தகைய தீ விபத்துகள் ஏற்படுகின்றன:
கடந்த நவம்பர் 2023-ல் ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியதுடன், 2012-ல் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் 260 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.



