தனித்துவ அடையாளங்களை விட தேசிய அடையாளமே முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது!
ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் வலியுறுத்தல்
தனித்துவ அடையாளங்களுடன் ஒதுங்கி இருப்பதை விட தேசிய அடையாளங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதே இந்நாட்டின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது என்று வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.
குருநாகல் முஸ்லிம் வர்த்தக அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (12) குருநாகல் ப்ளூ ஸ்கை ஹோட்டலில் நடைபெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றும்போது ஆளுனர் கௌரவ நஸீர் அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவர்களாக மதிக்கப்படும் டீ.பி.ஜாயா, சேர் ராசிக் பரீத், பதியூதீன் மஹ்மூத், எம்.எச்.எம். அஷ்ரப் போன்றவர்கள் தேசிய அரசியலுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டதன் காரணமாகவே இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளைப் பெற்றுத் தந்தார்கள். அந்த வகையில் தனித்துவ அரசியலை விட தேசிய அடையாளங்களுடனான அரசியலே எமக்குப் பாதுகாப்பானது. பலன் தரக்கூடியது.
கடந்த காலங்களில் நாங்கள் ஏராளமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டோம். ஆனாலும் அவ்வாறான சந்தர்ப்பங்களிலும் குருநாகல் போன்ற இடங்களில் ஏனைய சமூகங்களுடனான நல்லுறவு காரணமாக பாதிப்புகள் குறைவாக இருந்தது. அதன் மூலம் நாங்கள் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள முடிந்துள்ளது.
என்னைப் பொறுத்தவரை நான் என்றைக்கும் இனரீதியான சிந்தனை, இனரீதியான செயற்பாடுகள் கிடையாது. என்னைச் சந்திக்க வரும் எந்தவொரு நபரின் இன, மத அடையாளங்களையும் நான் கவனிப்பது கிடையாது. என்னை நாடிவரும் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதை மட்டுமே என் கடமையாகக் கருதுகின்றேன்.
ஆகவே தேவையுள்ள எந்தவொரு நபரும் என்னை எந்தநேரத்திலும் தேடி வரலாம். அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதை என் சந்தோசமாக நான் கருதுகின்றேன்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை சுய திருப்தியை விட இறை திருப்தியை முன்னிட்டு செயற்பட வேண்டும். எண்ணங்கள் தூய்மையாக அமையும் போது எமது செயற்பாடுகள் அனைத்தும் இறை திருப்தியை முன்னிட்டதாக அமையும். நேர்மையான முறையில் மேற்கொள்ளப்படும்போது வர்த்தகமும் கூட ஒரு இறை திருப்தியைத் தரும் செயற்பாடாக அமையும்.
குருநாகல் மாவட்டத்தைப் பொறுத்தவரை எல்லா வளங்களும் நிரம்பிய ஒரு மாவட்டமாகும். அந்த வகையில் இந்த மாவட்டத்தில் சுற்றுலாத் துறை ஊடாக பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளை மேற்கொள்ள முடியும். சுற்றுலாத்துறை ஊடாக பல்வேறு புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்க முடியும். வடமேல் மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். இன்வெஸ்டிங் வயம்ப என்றொரு திட்டத்தை அதற்காக முன்மொழிந்துள்ளோம்.
குருநாகல் நகரை ஒரு ஹெல்த் சிட்டியாக மாற்றும் எண்ணக்கரு ஒன்றும் உள்ளது. அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளோம். குளியாப்பிட்டிய நகரை ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்காவாக மாற்றி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கான உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. இவ்வாறாக வடமேல் மாகாணத்தை பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி செய்வதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
இவற்றின் ஊடாக உரிய பயனைப் பெற்றுக்கொள்ளவேண்டியது இப்பிரதேச மக்களின் பொறுப்பாகும். புதிய முதலீட்டுத் திட்டங்களில் உரிய பங்களிப்பைச்செய்ய வேண்டியது இங்குள்ள வர்த்தகர்களின் பொறுப்பாகும். அதிலும் தனி வர்த்தக முயற்சிகளை விட காலமாற்றத்துக்கு இசைவாக கூட்டு வர்த்தக முயற்சிகளாக மாற்றி அமைக்கும் போது அதன் வெற்றியும், பலமும் அதிகமாக இருக்கும்
அதேபோன்று குருநாகல் மாவட்ட மக்கள் தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதிலும் கவனம் செலுத்தவேண்டும் . அதற்கான அரசியல் வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஏனைய விடயங்களால் சாதிக்க முடியாத பல விடயங்களை அரசியல் பிரதிநிதித்துவம் மூலமாக சாதித்துக் கொள்ள முடியும் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் குருநாகல் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸார்தீன், வடமேல் மாகாண அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமந்த அபேவிக்கிரம, குருநாகல் முஸ்லிம் வர்த்தக அமைப்பின் தலைவர் எம்.வை.எம். கியாஸ் ஜே.பி., செயலாளர் எம்.எல்.எம். மிதிலாஜ், பொருளாளர் ஏ.எம். இர்பான், அமைப்பின் போசகர் ரயீஸ் மீரா, பிரபல வர்த்தகர் நவாஸ் ஹாஜி, குருநாகல் சாஹிராக் கல்லூரி அதிபர் ஏ.எம். சித்தீக், சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் சபருல்லாஹ் ஹாஜியார், பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் ஷாபி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.