இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையின் தேசிய ஊடக கொள்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 8.30 மணியளவில் புத்தளம், கருவலகஸ்வெவ தப்போவ லேக் ரிசோட்டில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்டத்தின் ஊடகவியலாளர்களுக்கான குறித்த விஷேட கலந்துரையாடல், இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் அமைப்பாளர் திரு. லசந்த டி சில்வா தலைமையில் இடம்பெற்றது.
நாட்டில் இதுவரை ஸ்திரமான ஊடக கொள்கை ஒன்று இல்லாத நிலையில், அரசாங்கத்தினால் தற்போது அதற்கான வரைவு இடம்பெற்று வருவதால், அது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையில் இதுவரை பல துறைகளுக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஊடகத்திற்கான தேசிய ஊடக கொள்கை ஒன்றின் அவசியம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
தற்போதைய புதிய அரசாங்கத்தினால் தேசிய ஊடக கொள்கை ஒன்று வரையப்பட்டு, அமைச்சரவை அங்கீககாரத்திற்காக காத்திருக்கின்ற நிலையில், மாவட்ட மட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடி, குறித்த தேசிய ஊடக கொள்கையில் உள்ளீர்க்கப்படவேண்டிய விடயங்கள் குறித்தும் இலங்கை சுதந்திர ஊடக அமைப்பினால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட குறித்த ஊடக அமைப்பு, அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டது.
மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் பொருளாதார ரீதியான தடைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை சோஷலிச குடியரசின் தேசிய ஊடக கொள்கை ஒன்றின் மூலம் மாத்திரமே ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் தேசிய ஊடக கொள்கையின் தேவை, குறிக்கோள், கொள்கைப்பிரகடனம் மற்றும் மூலோபாயங்கள் குறித்து மிக ஆழமாக பரிசீலிக்கப்பட்டதுடன், குறித்த தேசிய ஊடக கொள்கையில் மேலதிகமாக சேர்த்துக்கொள்ளப்படவேண்டிய மற்றும் நீக்கப்படவேண்டிய விடயங்கள் பற்றியும் பரிசீலிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல முக்கிய விடயங்கள் தேசிய ஊடக கொள்கை வரைவை மேற்கொண்டுள்ள குழுவிற்கு பரிந்துரைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில், இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் நிர்வாகிகள், புத்தளம் மாவட்ட செயலக அதிகாரிகள், மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




