பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட முஸ்லிம் கலாச்சாரப் போட்டியின் அறிவுக்களஞ்சியப் போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி வட மாகாணத்தில் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட மட்ட அறிவுக்களஞ்சியப் போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி முதலிடம் பிடித்து மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகி இருந்தது.
அந்த வகையில் மன்னார் முருங்கன் பாடசாலையில் நடைபெற்ற மாகாண மட்ட அறிவுக்களஞ்சியப் போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
குறித்த போட்டியில் ஒவ்வொரு பாடசாலை சார்பாகவும் 5 மாணவர்கள் கலந்துகொண்டு போட்டியில் பங்கெடுத்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற மாகாண மட்ட அறிவுக்களஞ்சியப் போட்டியில் ஏனைய சகல பாடசாலைகளையும் வீழ்த்தி மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை ஓர் சிறப்பம்சமாகும்.
இதேவேளை குறித்த முஸ்லிம் கலாச்சாரப் போட்டியின் அதான் கூறுதல் போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் எஸ்.சப்ராஸ் முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அரபு தமிழ் போட்டியில் அதே பாடசாலையைச் சேர்ந்த எச்.அஸ்ரா என்ற மாணவியும் முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நடைபெற்ற மாகாண மட்ட போட்டிகளில் ஒரே பாடசாலை மூன்று போட்டிகளிலும் முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும்.
குறித்த போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற சகல வழிகளிலும் மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு ஊர் மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துவரும் அதேவேளை மாணவர்களின் இச்சாதனைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
