புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா கடல் பகுதியில் நேற்று (22) சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கரையொதுங்கிய சடலம், சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டனர்.
37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்ற மூன்று மீன்பிடி இயந்திர படகுகள் பலத்த காற்று மற்றும் புயலில் சிக்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இரண்டு மீன்பிடி இயந்திர படகுகளில் பயணித்த மீனவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், மற்றுமொரு படகில் பயணித்த 37 மற்றும் 40 வயதுடைய இரண்டு மீனவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு காணாமல் போன மீன்பிடி படகு மற்றும் அதில் இருந்த இரண்டு மீனவர்களையும் தேடி சனிக்கிழமை (19) இரவு இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கடற்பிரதேசங்களில் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் மீன்பிடி படகு மாத்திரம் ஞாயிற்றுக்கிழமை (20) காலை சிலாபம் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாகவும், எனினும் இரண்டு மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையிலேயே, காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய சடலம் மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தொடுவா கடல் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் இன்று (22) மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த சடலம் திடீர் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, காணாமல் போன 40 வயதான மற்றைய மீனவரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
-புத்தளம் நிருபர் ரஸ்மின்-