ஒரு கோடி 20 லட்சம் மக்களுக்கு சொந்தமான கடல் பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதன் காரணமாகவே இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள் என்றும், நாங்கள் கடலுக்குச் சென்று எப்பொழுது கடலுக்கு இவர்கள் வருவார்கள், அவர்களை கொண்டு வந்து சிறையில் எப்பொழுது அடைப்போம் என்று நாம் ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை என கடல் தொழில் அமைச்சர் இராமலிங்கம் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இன்றைய தினம் காணி உறுதி வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய கடற்பரப்புக்குள் அத்துமறி உள் நுழைந்ததாக இலங்கை மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு இன்றுவரையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு எந்த விமோனமும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் இந்திய மீனவர்களது போராட்டமானது நியாயமற்றது என கடல் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களை நாங்கள் அடாவடித்தனமாக, அடிப்படை காரணங்கள் இன்றி பிடித்து சிறை வைக்கவில்லை. அவர்கள் இலங்கையினுடைய எல்லைக்குள் வருவதனால், இலங்கையினுடைய சட்டத்துக்கு அமைவாக கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.
எமது தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற வடக்கு கிழக்கிலே வாழுகின்ற தமிழ் மீனவர்களுடைய ஜீவனோபாயத்தினை முற்றும் முழுதாக அளிக்கும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால்தான் இவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள் என்றும் இதுவா தொப்புள் கொடி உறவை பேணும் செயல் என்றும் கடல் தொழில் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீரி மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள் எவராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் ஆணித்தரமாக தெரிவித்தார்.
