ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரர் தோனி தனது 43 வது வயதில் விளையாடுகிறார். 12 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த தோனி மற்ற வீரர்களுக்கு பெரிய அளவு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தம்மை புதிய விதி மூலம் மாற்றிக்கொண்டு சம்பளத்தை வெறும் 4 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டார்.
மேலும் தோனிக்கு இதுதான் கடைசி சீசன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 43 வயது வீரர் ஒருவர் என் ஐபிஎல் போல் கடினமான தொடரில் விளையாட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தான் இதை தோனியிடமே கேட்டு பதிலை வாங்கியதாக கூறினார்.
இது குறித்து பேசிய அவர்,”அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் நான் தோனியை சந்தித்தேன். அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்கின்றார். உடலும் வலுவாகவே இருக்கின்றது. நான் அவரிடம் உனக்கு இது கடினமாக இல்லையா? ஏன் இதை செய்கிறாய் என்று கேட்டேன்.” “அதற்கு நிச்சயமாக எனக்கு இது கடினமாக தான் இருக்கின்றது. ஆனால் இதை செய்யும் போது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பயணத்தை நான் மகிழ்ச்சியாக செய்கின்றேன். மாலை நேரத்தில் மணி நான்கு அல்லது ஐந்தாக ஆனால் உடனே நான் பேட்டை எடுத்துக்கொண்டு விளையாட சென்று விடுகிறேன்.”
“என் வாழ்நாள் முழுவதும் நான் இதை தான் செய்து வருகின்றேன். உங்களுக்கு விளையாட வேண்டும் என்ற உத்வேகம் இருக்கும் வரை உங்களால் செய்ய முடியும் என்று தோனி எனக்கு பதில் அளித்ததாக ஹர்பஜன் சிங் கூறினார். மேலும் தோனி குறித்து பேசிய ஹர்பஜன், எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் திடீரென்று ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் விளையாடுவது என்பது மிகவும் கடினம்.”
“ஆனால் தோனி அதை எப்படி செய்ய வேண்டும் என்று மற்றவர்களுக்கு காட்டுகிறார். மற்றவர்களை விட இவர் ஏதோ வித்தியாசமாக செய்கின்றார். ஐபிஎல் விளையாட வேண்டும் என அவர் வந்து பிழைத்தால் போதும் என்று விளையாடவில்லை. மற்ற பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். பயிற்சியில் அதிக பந்துகளை அவர் எதிர்கொள்கிறார். ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பு தோனி இதனை செய்கின்றார்” என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.