கடந்த வெள்ளிக்கிழமை (05.09.2025) இரவு 8.30, மணியளவில் புத்தளம்-கொழும்பு பிரதான வீதி, நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய நாகவில்லு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30, மணியளவில் நாகவில்லு ஜும்மாஹ் பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் வைத்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புத்தளம் நோக்கி மிக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, வேக கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நின்ற குறித்த நபரின் மீது மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தப்பித்து சென்றுள்ளதுடன், விபத்துக்குள்ளாகிய நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, மீண்டும் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த நபர் நாகவில்லு பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், பு/எருக்கலம்பிட்டி பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய மர்ஹூம் மனாப் ஆசிரியரின் சகோதரர் எனவும் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் விபத்தை ஏற்படுத்திய குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
