புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்திற்கு “EWARDS 87” அமைப்பினால் ஒரு தொகை பணம் இன்று 19.8.2025 நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் அவர்களிடம் குறித்த நன்கொடைப் பணம் இவ்வாறு கையளிக்கப்பட்டது.
பாடசாலை சுற்று மதிலின் ஒரு பகுதி கடந்த வெள்ள அனர்த்தத்தின்போது இடிந்து வீழ்ந்தமையால், அதன் புனர் நிர்மாணப் பணிக்காக “EWARDS 87” அமைப்பினால் சுமார் 82000/- ரூபாய் பணம் நன்கொடையாக இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்த வருட ஆரம்பத்தில் புத்தளம் எருக்கலம்பிட்டியில் ஏற்பட்ட கடும் வெள்ள அனர்தத்தினால் முழுக்கிராமமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை வளாகமும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் பாடசாலையின் மைதான பக்கம் உள்ள சுமார் 50 அடி நீளமுள்ள சுவர் இடிந்து வீழ்ந்ததுடன், அதன் தொடர்ச்சியாக உள்ள ஏனைய சுவர்களும் இடியும் தருவாயில் காணப்பட்டதை அடுத்து, அதனை மீண்டும் கட்டுவதற்கான அனுமதியை புத்தளம் வலயக்கல்வி பணிமனையிடம் பாடசாலை வேண்டியிருந்தது.
எனவே பாடசாலையின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் வலயக்கல்வி பணிமனையினால் குறித்த பகுதி ஆய்வு செய்யப்பட்டதுடன், மைதான பக்கம் எஞ்சியுள்ள சுவர்களும் இடிக்கப்பட்டு புதிதாக மீண்டும் சுவர் கட்டப்பட வேண்டும் என திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டது.
அதன் பிரகாரம் மைதான பக்கமுள்ள சுமார் 280 அடி நீளமுள்ள சுவர்களை கட்டுவதற்கான மதிப்பீடு தொழிநுட்ப உத்தியோகத்தரினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த 280 அடி நீளமுள்ள சுவர்களை கட்டுவதற்காக சுமார் 35 லட்சம் செலவாகும் என தொழிநுட்ப உத்தியோகத்தரினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த கட்டுமானப்பணியை ஆரம்பிப்பதற்கான அனுமதியையும் புத்தளம் வலயக்கல்வி பணிமனை வழங்கியுள்ளது.
அந்த வகையில் குறித்த சுவரின் கட்டுமானப் பணிக்கு முதன் முதலாக”EWARDS 87″ அமைப்பினால் சுமார் 82000/- ரூபாய் பணம் பாடசாலைக்கு நன்கொடையாக இன்று வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் குறித்த கட்டுமானப் பணிக்கு ஊரின் தனவந்தர்கள், கழகங்கள், அமைப்புக்கள் என அனைத்து தரப்பினரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு பாடசாலை அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே பாடசாலையின் தற்போதைய மிக முக்கிய தேவையாக உள்ள குறித்த கட்டுமானப்பணிக்கு அனைத்து தரப்பினரும் தங்களது பூரண ஒத்துழைப்புக்களையும், உதவிகளையும் வழங்கி பாடசாலையின் வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும் கை கோர்க்குமாறு பாடசாலை அதிபர் வினயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் EWARDS 87 அமைப்பின் தலைவர் சியாத், பொருளாளர் நிஸ்பான் மற்றும் கழக உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
