கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறு புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை மாணவியின் வாழ்வில் பெரும் அதிஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்று முடிந்த 2024 புலமைப்பரிசில் பரீட்சையில் புத்தளம் மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 138 என வெளியாகியிருந்த நிலையில், பர்சான் பாத்திமா சபிய்யா எனும் மாணவி 137 புள்ளிகளை பெற்று பரீட்சையில் சித்திபெற தவறியிருந்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவி, ஒரு புள்ளி வித்தியாசத்தில் சித்திபெற தவறியமையால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார்.
இறைவன் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையாலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும் குறித்த பரீட்சை வினாத் தாள்களை மீள்திருத்த விண்ணப்பித்திருந்த மாணவிக்கு மகிழ்ச்சியான பெறுபேறு கிடைத்துள்ளது.
பரீட்சை வினாத் தாள் மீள்திருத்ததின் பின்னர் புத்தளம் நாகவில்லுவில் வசிக்கும் பர்சான் பாத்திமா சபிய்யா எனும் மாணவி 139 புள்ளிகளை பெற்று 2024ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் மேலதிக ஒரு புள்ளியினால் சித்திபெற்றுள்ளார்.
இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தான் இறைவன் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற பரீட்சைகளில் சித்திபெற தவறும் மாணவர்கள் கண்டிப்பாக வினா தாள்களை மீள்திருத்தம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
கல்வியில் இவ்வாறு சாதிக்க துடிக்கும் பிள்ளைகளை ஊக்குவிக்கும் பொறுப்பு சமூக ஊடகங்களுக்கும் இருக்கின்றது என்பதை நினைவூட்டுகிறோம்.