புத்தளம் நாகவில்லு கிராமத்தில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள நீரினை வடிகான்கள் ஊடாக வெளியேற்ற முறையான வடிகான் வசதிகளை மேற்கொண்டு தருமாறு கோரி வடமேல் மாகாண ஆளுநரிடம் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று இன்று 17.11.2025 திங்கட்கிழமை கையளிக்கப்பட்டது.
புத்தளம் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஜனாப் லரீப் காசிம் அவர்களினால் எழுத்து மூலமான கோரிக்கை அடங்கிய மகஜர் வடமேல் மாகாண கெளரவ ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய அவர்களிடம் அவரின் காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
புத்தளம் நாகவில்லு கிராமத்தில் சுமார் 1500இற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்துவருவதுடன், தற்போது வருடா வருடம் பெய்யும் கனமழை காரணமாக இக்கிராமம் வெள்ள அனர்த்தத்திற்கு தொடர்ச்சியாக முகம்கொடுத்து வருவதாக ஜனாப் லரீப் காசிம் அவர்கள் கெளரவ ஆளுநருக்கு எடுத்துரைத்தார்.
மேலும் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான முறையான வடிகான் வசதி இல்லாமையால், நாகவில்லு கிராம மக்கள் வருடம்தோறும் வெள்ள நீர் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதுடன், பொருளாதார ரீதியாகவும் பாரிய இழப்புகளை சந்தித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மழை காலங்களில் நாகவில்லு கிராமத்திற்கு அருகில் உள்ள பொத்துவில்லு கிராமத்தில் அமையப்பெற்றுள்ள குளத்தின் நீர் மட்டும் உயரும் நேரங்களில், அதன் வான் கதவுகள் திறக்கப்படுவதினாலும், குளத்தை மேவி மழை நீர் பாய்ந்து வழிந்தோடி வருவதினாலும் நாகவில்லு கிராமம் நேரடியாக பாதிக்கப்படுவதாக கெளரவ ஆளுநரிடம் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தத்தினால் நாகவில்லு கிராமம் பல வகையான இழப்புகளை சந்தித்து வருவதாக குறிப்பிட்ட புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் லரீப் காசிம், இந்த வெள்ள அபாயத்தை நிரந்தரமாக தடுக்கும் நோக்கில் வடிகான் வசதிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு கெளரவ ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.
விடயங்களை நன்கு கேட்டறிந்த கெளரவ வடமேல் மாகாண கெளரவ ஆளுநர் அவர்கள், இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கு தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.






