நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை, தமிழ் மக்களின் ஒரு வாக்கு கூட உள்ளூராட்சி சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு போகக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் -சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எங்கள் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு காரணமாக இவர்களுக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். அந்த பரிசோதனையை மக்கள் இந்த உள்ளூராட்சியிலும் செய்வதற்கு நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை. ஒருவாக்கு கூட தேசிய மக்கள் சக்தி இந்த தேர்தலில் போடக்கூடாது என தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் சில வேளைகளில் சபைகளை கைப்பற்றினால் சபைகளின் கீழுள்ள சந்தைகளின் கடைகளைக்கூட தேசிய ரீதியில் கேள்வி கோரலை மேற்கொள்ளுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைகள் என்பது எமது அடிமட்ட அரசியலை கொள்கை ரீதியான அரசியல் பயணமாக மேற்கொள்வதே எனவும், ஆனையிறவு உப்பை ஆனையிறவின் பெயரை மாற்றி இன்று ரஜ லுணு என மாற்றியுள்ளனர். சபைகள் எமது கைகளில் இருக்கும் போது இந்த விடயங்கள் எல்லாம் நடைபெறாது என அவர் சுட்டிக்காட்டினார்.
வடபகுதி மக்கள் தமிழ்த்தேசியத்தை கைவிட்டுள்ளனர். ஏன் பிரித்தானியா நான்கு பேர் மீதும் தடை கொண்டு வருகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கூறியுள்ளார் என்பதை சிந்திக்க வேண்டும்.
நாங்கள் விட்ட மிகப்பெரிய தவறு, பொது வேட்பாளருக்கு ஒட்டு மொத்த மக்களும் ஆதரவளித்து ஐந்து இலட்சத்திற்கும் மேலான வாக்குகளை அளித்திருந்தால் பிரித்தானியா போன்ற நாடுகள் தமிழர்கள் தனித்துவமாக உள்ளார்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். நான்கு பேரை தடை செய்ததை விட பெரிய வெற்றியை தவறை விட்டுள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ் -சிறீதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
