வைத்திய ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் மேலதிக சேவைகால கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை (27) நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளின் முன்பாக தாதியர்கள் ஒரு மணி நேர கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தற்போதைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய வரவு–செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள போதும் வைத்திய ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் மேலதிக சேவைகால கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளதாக தாதியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளின் முன்பாக இன்றையதினம் அரச தாதியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் தாதியர்கள் ஒன்றிணைந்து நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மதிய இடைவேளையின் போதே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்ததை தொடர்ந்து கடுமையான போராட்டங்களின் பின்னர் வைத்திய ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் அரசாங்கம் இவ்வருடத்துக்கான புதிய வரவு-செலவு திட்டத்தில் சம்பளத்தை அதிகரித்து கொடுப்பனவுகளை குறைத்து நியாயமற்ற முறையில் செயற்படுவதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அரச தாதியர் சங்கத்தின் துணைத் தலைவர் நாகல ஹெட்டியாராச்சி தொழிற்சங்க நடவடிக்கைத் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் புதிய வரவு-செலவுத்திட்டத்தில் சம்பள அதிகரிப்புக்கு இணையாக சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், தர உயர்வுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 5 வருடங்களின் பின்னர் வழங்கப்படும் தர உயர்வை 10 வருடங்களாக அரசாங்கம் நீடித்துள்ளது. கடிதம் மூலம் எமது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ள போதும், அதற்கான எவ்வித பதில்களும் இதுவரை வழங்கப்படவில்லை.
எமக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறோம். புதிதாக எமக்கு எதுவும் தேவையில்லை. ஏற்கனவே இருந்த சலுகைகளையும் கொடுப்பனவுகளும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தாதியர்களின் கடமைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மதிய இடைவேளையில் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டது என்றார்.