இலங்கையின் புதிய இடதுசாரி அதிபரும் அவரது கட்சியும் பெற்ற பிரமிக்க வைக்கும் தேர்தல் வெற்றி அந்நாட்டு அரசியல் சூழலை மாற்றியுள்ளன.
ஆனால், இலங்கையில் நிதி நெருக்கடி நிலவும் நிலையில் அந்நாட்டின் புதிய தலைவர்கள், தங்கள் பிரசார வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குக் கடினமான சூழல் நிலவுகிறது.
செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.
ஒரு புதிய ஆண்டு தொடங்கும் வேளையில், மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் பல ஆண்டுகளாக தவறான ஆட்சியில் இருந்து மீள முயற்சிக்கும் நாட்டுக்கு இது ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்று அவரும் அவரது ஆதரவாளர்களும் விரும்புகிறார்கள்.
முந்தைய அரசாங்கம் இலங்கையின் பொருளாதாரத்தை உறுதியாக்கும் விதமாக 2.9 பில்லியன் டாலர் (2.31 பில்லியன் யூரோ) நிதித் தொகைப் பெறுவதற்காக, ஐ.எம்.எஃப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
கடுமையான சிக்கன நடவடிக்கைகள், வரி உயர்வு மற்றும் எரிசக்தி மானியங்களை குறைவாக வழங்குவதற்கு, ஐஎம்எஃப் ஒப்பந்தம் வழி வகுத்ததால் சர்ச்சைக்குரியதாக மாறியது. மேலும், இது பொதுமக்களின் வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
தேர்தல் பிரசாரத்தின் போது திஸாநாயக்கவும் அவரது கூட்டணியும் ஐஎம்எஃப் உடன்படிக்கையின் சில பகுதிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாக உறுதியளித்தனர்.
ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில், தனது நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக்கொண்டார்.
“பொருளாதாரம் மிகவும் பலவீனமாக உள்ளது, ஒரு சிறிய மாற்றம் கூட பேரழிவை ஏற்படுத்தும்…தவறு செய்வதற்கு எந்த வாய்ப்பையும் வழங்க முடியாது,” என்று திஸாநாயக்க கூறினார்.
“(ஐஎம்எஃப் கடனின்) விதிமுறைகள் நல்லதா அல்லது கெட்டதா, ஒப்பந்தம் நமக்கு சாதகமாக உள்ளதா, இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்க இது நேரம் அல்ல. இந்தச் செயல்முறை சுமார் இரண்டு ஆண்டுகள் எடுத்தது, இதனை எங்களால் மீண்டும் தொடங்க முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.
“அதிகமான வரிவிதிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்படுத்திய நெருக்கடி காரணமாக மக்களுக்கு சில பொருளாதார நிவாரணங்களை வழங்குவதே திஸாநாயக்கவின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். கடன் மேலாண்மை மற்றொரு பெரிய சவாலாகும்,” என்று மூத்த அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட பிபிசியிடம் கூறினார்.
அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது உண்மையான போராட்டம் தொடங்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால், ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் அவரது புதிய அரசாங்கம் பற்றிய மக்களின் பார்வை மாறலாம்.
“மக்கள் அவருக்கு ஒரு மிகப்பெரும் தீர்ப்பை வழங்கியுள்ளனர். சமூக நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க அவரை அனுமதிப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியம் அதற்கு மதிப்பளிக்க வேண்டும்” என்கிறார் பேராசிரியர் உயங்கொட.
திஸாநாயக்க, இலங்கையில் இந்தியா மற்றும் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் சவாலை எதிர்கொள்கிறார். இரண்டு நாடுகளும் சமீபத்திய ஆண்டுகளில் இலங்கையில் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளன.
இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் தாக்கம், குறிப்பாக சீன “ஆராய்ச்சி” கப்பல்கள் இந்தியாவின் தெற்கு முனைக்கு அருகில் உள்ள தீவின் துறைமுகங்களுக்கு வருகை தருவது இந்தியாவுக்குக் கவலை அளித்துள்ளது.
“இந்தியாவின் நலனுக்கு பாதகமான வகையில் எங்களது நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று நான் இந்திய பிரதமரிடம் உறுதியளித்துள்ளேன்,” என்று நரேந்திர மோதியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் திஸாநாயக்க கூறினார்.
இந்த உறுதிமொழியால் இந்தியா மகிழ்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் சீனாவுக்கு பயணம் செய்யும்போது சீனா என்ன எதிர்பார்க்கிறது என்பதை திஸாநாயக்க அறிந்துகொள்வார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு